Tuesday, November 19, 2013

ஏதேனைச் சேர்ந்த மனித குலம்


பூமியில் வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாத, ஆனால் மனிதன் மட்டுமே படும் சில அவஸ்தைகளை, வேதனைகளை சுட்டிகாட்டி ஒரு விஞ்ஞானி ஒரு வேளை மனிதன் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல, அவன் வேறெங்காவதிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற‌ முடிவுக்கு வந்திருக்கின்றார். கடுமையான‌ பிரசவ வேதனை பூமியில் மனிதன் மட்டுமே படும் வேதனைகளில் ஒன்று. வேறெந்த உயிரினங்களிலும் இல்லாதது. அது போலவே சூரிய வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மென்மையான‌ தோல், முதுகு வலி இப்படியாகப் பல. 

ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வேதனைகளெல்லாம் கடவுள் ஆரம்பத்தில் மனிதனுக்காக படைத்த‌ ஏதேன் தோட்டத்தில் இருந்ததில்லை. எப்போது மனிதன் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டானோ அப்போது வந்தவைகள் தான் இந்த வலிகளும் வேதனைகளும். ஆதியாகமம் 3:16 சொல்லுகிறது கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியா யிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்று.இப்படியாக பிரசவ வேதனை வந்தது.அது போலவே சும்மா சொகுசாக‌ இருந்து சாப்பிட்ட ஆதாம் பாவம் செய்த பின் "நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்" என்ற சாபம் வந்தது. முதுகு வலியும் கூடவே வந்தது. சரியாய் தான் சொன்னார் இந்த விஞ்ஞானி. நாம் பூமியில் வாழ‌ படைக்கப்பட்டவர்களல்ல.ஏதேன் தோட்டத்தில் வாழவே படைக்கப்பட்டோம். மனிதன் செய்த‌ பாவத்தால் இந்த பூமி சபிக்கப்பட்டதாயிற்று. மேற்சொன்ன சாபங்களும் வேதனைகளும் வந்தது. இன்னும் சில காலம் தான்.புதிய வானமும் புதிய பூமியும் தோன்றும். மனுஷர்களிடத்திலே நம் தேவன் வாசமாயிருப்பார்.அப்போது மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் எல்லாம் ஒழிந்துபோகும்.எல்லாம் புதிதாகும். ஆமேன். அல்லேலூயா. (வெளி:21:1-4)

Sunday, November 10, 2013

பில்லி கிரஹாம் இறுதி பிரசங்கம் The Cross - Billy Graham's Message To America


எப்படி அழாம‌ல் இருக்க முடியும் அவரால்? அமெரிக்க தேசத்தின் எழுப்புதலையும் பிற்பாடு இப்போதைய பின்னடைவையும் கண்டவரன்றோ அவர். சமீபத்தில் தனது 95 ஆவது வயதை கட‌ந்து ஆனால் இன்னமும் நம்பிக்கையாக அமெரிக்காவுக்காக பரிதபித்து அழுது கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் பில்லி கிரஹாம். ந‌மது கண்முன்னே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியின் மாபெரும் தேவ மனிதர். அவரின் பிறந்த நாளையொட்டி அவரது இருதய ஏக்கம் இங்கே அவரது "இறுதி பிரசங்கமாக" வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தேவாசீர்வாதம் பெறுங்கள். "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" என்ற சங்கீதம் 71:18 வசனப்படி தேவனும் அவரை கைவிடவில்லை. இறுதி அறிவிப்பும் அவர் கொடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் பாடு.
http://watchbillygraham.com/


தமிழகம் வரும் இஸ்ரேலின் விவசாயப் புரட்சி

பாழாய்க்கிடந்த ஒரு தேசம் ஏதேன் தோட்டம் போலாகிக் கொண்டிருக்கும் கதை உங்களுக்குத் தெரியுமா? அத்தேசத்தின் செழிப்பின் ரகசியம் உலகத்திற்கே வியப்பளிக்கிறது. எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 35ம் வசனம் சொல்கிறது.”பாழாய்க்கிடந்த இஸ்ரேல் தேசம், ஏதேன் தோட்டத்தைப் போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப் பட்டவைகளுமாயிருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.” ஒரு காலத்தில் வனாந்திரமாய் பராமரிப்பற்று ஆளரவமற்ற பாலைநிலமாய் கிடந்த இஸ்ரேல் நிலங்கள் இன்று வேதாகமம் முன்னுரைத்தது போலவே வேளாண்துறையில் முன்னணியிலுள்ள நாடாக மாறிவிட்டது. தமிழக மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநில விவசாயிகள் அவர்களிடமிருந்து இரகசியங்களை கற்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேல் நாட்டில் ஒரே ஒரு நீர்த்தேக்கம் மட்டுமே உள்ளது. அந்த நாட்டில் கடும் தண்ணீர் பஞ்சம் உள்ளது. ஆனால், அங்குள்ள விவசாயிகள் தோட்ட பயிற்சி மற்றும் விவசாய பயிர்களை பயிரிடுவதில் பெரும் சாதனை படைத்து, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்கு காரணம் அங்குள்ள விவசாயிகள் உயர் தொழில்நுட்ப நவீன கருவிகளை பயன்படுத்தி விவசாயம் செய்வதுதான் என்கிறார்கள். இருக்கும் தண்ணீரில் ஒரு சொட்டு நீரைக்கூட வீணடிக்காமல், பயிர்களுக்கு பயன்படுத்தி இப்புரட்சியை செய்துள்ளனராம். தமிழகத்திலும் இதுபோன்ற விவசாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் இங்குள்ளோரின் விருப்பமும். ஆனால் அதற்கும் மேலான‌ ஒரு பிரதான இரகசியம் இருக்கிறது. அது தான் கடவுளின் ஆசீர்வாதம். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தின் 30-ம் வசனம் இப்படியாக சொல்கிறது ”நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்” என்று. இதுதான் உண்மையான இரகசியம். நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும் அல்லவா? (Iகொரி:3:7

Tuesday, November 05, 2013

இயேசு கிறிஸ்து விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்

"யுத்தங்களையும் போராட்டங்களையும் முடிவுக்கு கொண்டு வர இயேசு கிறிஸ்துவின் போதனைகள் உதவும்" துணை ஜனாதிபதி திரு.அன்சாரி பேச்சு.

இந்திய துணை ஜனாதிபதி திரு.ஹமீது அன்சாரி அவர்கள், பெங்களூரிலுள்ள எக்கியுமெனிக்கல் கிறிஸ்டியன் சென்டரில் ஒரு பொன் விழா கொண்டாட்டத்தில் பேசும் போது, “மனித வர்க்கத்தில் மடமைத்தனங்கள் தொடர்வதால், உலகின் பல பகுதிகளிலும் மனித வர்க்கம் வெறுப்புணர்வுகளுக்குள்ளும் மோதல்களுக்குள்ளும் உந்தி தள்ளப்படுகிற நிலையில், இயேசுவின் என்றென்றும் நிலைத்திருக்கும் செய்தியான அன்பு மற்றும் மனதுருக்கம், ஜனங்களுக்கு மீட்பின் வழியை காண்பிக்கிறது. நாம் அப்படியே எழுத்தின் பிரகாரமும் ஆவியின் பிரகாரமும் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்ததை பின்பற்றுவோமானால், நம்மால் நிச்சயமாக யுத்தங்களையும் போராட்டங்களையும் இந்த‌ உலகத்தை விட்டு நீக்க முடியும். அதன் மூலம் கிடைக்கும் நீடிய‌ சமாதானம் வழியாக மனித சமுதாயத்திற்கு தேவையான முன்னேற்றத்தையும் செழிப்பையும் நாம் ஏற்படுத்த முடியும்" எனக் கூறினார்.   மேலும் அவர் கூறும் போது "சமுதாயத்தில் தாழ்ந்த வறுமை நிலையிலுள்ள‌  மக்களுக்கு கல்வி,ஆரோக்கியம், தொண்டு வழியாகவும் சமூக சீர்திருத்தங்கள் வாயிலாகவும் நம் இந்திய தேசத்திற்கு கிறிஸ்தவ சமுதாயம் ஆற்றிய சேவைகளை இந்திய மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். நானும் கூட, சிம்லாவிலுள்ள ஐரிஸ் சகோதரர்கள் நடத்திய பள்ளியிலும், கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெசுய்ட்ஸ் நடத்திய கல்லூரியினாலும் உருவாக்கப்பட்டவன் தான்” என்று திரு.அன்சாரி அவர்கள் கிறிஸ்துவைக் குறித்தும் கிறிஸ்தவத்தைக் குறித்தும் பேசினார்.

வேதாகமம் சொல்லுகிறது,இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் என்று.கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.இயேசு சொன்னார் "சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை.உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக"(யோவா:8:36,IIகொரி:3:17, யோவா:14:27)