விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு
விரதம், உபவாசம் மற்றும் நோன்பு என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி தெரிவித்துள்ளார்.
பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத்தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும் , ஆட்டோஃபஜி. என்றழைக்கப்படும் ‘ சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆட்டோஃபஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பொருள். இச்செயல் மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. இதன்மூலம்தான் நம் உடற்செல்கள் மறுசுழற்சி செய்துகொள்கின்றன.
நமது உடல் உணவை தவிர்த்து விரதம் இருக்கும் காலங்களில் ஆட்டோஃபஜி எனப்படும் இச்சுழற்சி தீவிரமடைவதால் நமது உடல் நன்கு சுத்தமடைகிறது. எனவே அவ்வப்போது விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்ற நமது முன்னோர்களின் கூற்றை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டோஃபஜி நாம் சீக்கிரமே முதுமை அடைவதிலிருந்து நம்மை காக்கிறது. உடலில் புது செல்கள் உருவாக்கப்பட்டு பழுதடைந்த செல்களும், சேதமடைந்த புரோட்டீனும் வெளியே தள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆட்டோஃபஜி நமது உடல் நலத்தை நன்கு பேணி காக்கிறது.