Friday, August 22, 2008

அவர்களுடைய தேசத்துக்கு திரும்பிவரப்பண்ணுவேன்

எரேமியா 16:15இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

இந்த வேதவசனம் எப்படி நிறைவேறுகிறதென பாருங்கள்.


இந்திய யூத பழங்குடியினருக்கு இஸ்ரேல் அடைக்கலம்

டெல்அவிவ்: யூதர்களில் ஒரு பிரிவினராகக் கருதப்படும் பினேய் மெனேஷெ (Bnei Menashe) இனத்தைச் சேர்ந்த 7,232 இந்தியர்களை தனது நாட்டில் குடியேறச் செய்ய இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

மிசோரம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் இந்த சமூகத்தினர் இந்தியாவில் பழங்குடி அந்தஸ்து பெற்றவர்கள் ஆவர்.

யூதர்களான இவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு குடிபெயர்ந்தனர். இஸ்ரேலில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளதால், இந்தியாவில் வசிக்கும் இவர்களை மீண்டும் இஸ்ரேலிலேயே குடியமர்த்த வேண்டும் என அந் நாட்டில் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து அந் நாட்டு பிரதமர் எகுட் ஓல்மெர்ட் விவாதித்து வருகிறார். விரைவில் இவர்கள் இஸ்ரேலில் குடியேற்றப்படுவார்கள் என அந் நாட்டின் முன்னணி நாளிதழளான ஹார்ரேட்ஸ் கூறியுள்ளது.

ஏற்கனவே இந்த இனத்தைச் சேர்ந்த 1,400 பேர் இந்தியாவில் இருந்து இஸ்ரேலில் குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://thatstamil.oneindia.in/news/2008/08/22/world-israel-likely-to-admit-over-7000-indian-jews-from-mizo.html

Saturday, August 16, 2008

பாதி இரும்பும் பாதி களிமண்ணும்

இன்றைய ஐரோப்பிய யூனியன் குறித்து தானியேல் இவ்வாறு கூறுகிறான்.

தானியேல் 2-ம் அதிகாரம் 41. பாதங்களும் கால்விரல்களும் பாதிகுயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆனாலும் களிமண் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால் அந்த ராஜ்யம் ஒருபங்கு உயரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும். 43. நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.

மேதிய பெர்சிய அரசுக்குப் பிறகு, நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் வெண்கலதினாலான வயிறு தொடை இவற்றிற்கு ஒப்பான இன்னொரு வல்லரசு எழும்பும் என்ற தானியேலின் கூற்றின்படி கிரேக்க சாம்ராஜ்யம் உலகில் ஸ்தாபிக்கபடுகிறது. அதற்கு பிறகு சிலையின் இரும்பிலான கால்களுக்கு ஒப்பாக நான்காவதாய் ஒரு வல்லரசு எழும்பும், என்று தானியேல் முன்னறிவித்தபடி ரோமப்பேரரசு கிரேக்க சாம்ராஜ்யத்தின் முடிவில் எழும்புகிறது.இரும்பைப்போல உரம் வாய்ந்ததாய் எழும்பின ரோமப்பேரரசு , சிலையின் இரு கால்களுக்கு ஏற்ப கிழக்கு,மேற்கு என்று இரண்டாக பிரிகிறது. இவையாவும் சரித்திரமாகும். இவ்வாறு தீர்க்கதரிசனங்கள் சரித்திரப்பூர்வமாய் நிறைவேறுவது கிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகளில் முக்கியமானதாகும்.

நேபுகாத்நேச்சார் கண்ட சிலையின் பத்துவிரல்கள் இரும்பும் களிமண்ணுமாய் இருந்தன என்று வேதத்தில் வாசிக்கிறோம். இந்த பத்துவிரல்களும் ஒரு புதிய சாம்ராஜ்யம் என்று தானியேல் கூறவில்லை.அவை ரோம சாம்ராஜ்யத்திலிருந்து எழும்பும் பல நாடுகளின் ஒரு கூட்டமைப்பையே குறிக்கின்றன என்று நாம் நிதானிக்கலாம். தானியேலின் தீர்க்கதரிசனத்தின் படி பாபிலோனிய, மேதிய பெர்சிய, கிரேக்க, ரோமப் பேரரசுகள் உலகின் வல்லரசுகளாய் இருந்து முடிந்துவிட்டன. சிலையின் பத்து விரல்களுக்கு ஒப்பான ரோமப்பேரரசிலிருந்து எழும்பும் சில நாடுகள் சேர்ந்த அமைப்பின் காலத்திற்கு இப்போது உலகம் வந்துள்ளது. அதன்படி 1957 ஆம் ஆண்டு பழைய ரோம சாம்ராஜ்யம் எந்தெந்த நாடுகளில் வியாபித்திருந்ததோ அந்தந்த இடங்களைச் சேர்ந்த ஆறு ஐரோப்பிய நாடுகள் ரோமில் கூடி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு "European Economic Community"என்ற அமைப்பை ஏற்படுத்தின. இது "ஐரோப்பிய பொதுச்சந்தை" (European Common Market) என்று அழைக்கப்படுகிறது. இது 1958ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி செயல்படத் துவங்கியது. இந்த ஒப்பந்தம் "Treaty of Rome"என்று அழைக்கப்பட்டது. இதனுடைய ஆரம்ப விழா பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் கொண்டாடப்பட்டது. ஆறு நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் சேர்ந்திருந்தும் பத்து கொடிக்கம்பங்களுடன் இந்த ஆரம்பவிழா நடந்தது.(இப்போது இதில் 27 ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன) இந்த E.E.C தான் நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தில் தோன்றிய சிலையின் பத்துவிரல்களுக்கு ஒப்பான வல்லரசாகும். இந்த E.E.C ஓரு பொருளாதார அல்லது வாணிப அமைப்புத்தானே. அது எவ்வாறு ஒரு வல்லரசாகலாம் என்ற கேள்வி எழலாம்.இந்த E.E.C நிறைவேற்றிவருகிற தீர்மானங்கள் E.E.C ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றது.கீழ்கண்டவை E.E.C யின் தீர்மானங்களில் ஒரு சிலவாகும்:

ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் (United states of Europe) என்ற அமைப்பை ஏற்படுத்துதல்.(இது இன்று EU அதாவது European Union என்று ஆகியிருக்கின்றது.)

E.E.C யில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கிடையே பாஸ்போர்ட் முறையை நீக்கிவிடுதல் (ஏற்கனவே European standard passport என்ற பெயரில் அனைத்து அங்கத்தின நாட்டு குடிமக்களுக்கும் burgundy நிறத்தில் பொது பாஸ்போர்ட் இப்போது வழங்கப்படுகிறது.இவர்கள் அங்கத்தின நாடுகளிடையே விசா இன்றி சென்றுவரலாம்)

E.E.C நாடுகளுக்கு ஒரு பொது நாணய முறையைக் கொண்டு வருதல் (Common currency) (ஏற்கனவே வந்தாயிற்று. இன்றைக்கு இதன் 15 அங்கத்தினர்களிடையே யூரோ(Euro)எனும் பொது கரன்சி புழக்கத்திலுள்ளது)

E.E.C நாடுகளுக்கென்று ஒரு தனி பொது ராணுவத்தை நிறுவுதல் (European Union battlegroups (EU BGs) என்ற பெயரில் ஒரு கூட்டுப்படை 2007 முதல் செயல்படத்துவங்கியுள்ளது)

இத்தீர்மானங்கள் E.E.C அதாவது ஐரோப்பிய யூனியன் ஒரு வல்லரசாக மாறிவருகிறது என்பதை உணர்த்துகின்றன.இப்போது European Union-ல் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, லக்ஸம்பர்க், மால்டா,நெதர்லாந்து, போலந்து, போர்சுகல், ரொமானியா, ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன் மற்றும் இங்கிலாந்து என்னும் இருபத்தேழு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. மேலும் இந்த அமைப்பு தனக்கென்று ஒரு European Parliament என்ற பாராளுமன்றத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்கு 1979-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் தேர்தலும் நடத்திவருகின்றது. இந்த பாராளுமன்றத்தில் இன்றைக்கு 785 பேர் உறுப்பினர்கள். தற்போதைய ஜனாதிபதி José Manuel Barroso ஆவார். இந்தியாவிலும் Delegation of the European Commission to India, Bhutan and Nepal தலைநகர் டில்லியில் இயங்கிவருகின்றது. இந்த ஐரோப்பிய கமிஷனின் தலைமையகம் இப்போது பெல்ஜியத்திலுள்ள பிரசல்சில் உள்ளது. பெரிய உலக பாங்குகளின் இணைப்பு சங்கிலி இப்போது பிரசல்சோடு இணைக்கப்பட்டுள்ளது. உலகமன்றத்திலுள்ள 160 கம்புயூட்டர் மையங்களும் பிரசல்சோடு இணைக்கப்படுள்ளன. European Union-னின் தலைமையகத்தில் மூன்று அடுக்குமாடி உயரமுள்ள ஒரு கம்புயூட்டர் உள்ளது. அதன் பெயர் Beast (மிருகம்) என்பதாகும். அந்திகிறிஸ்துவை வேதம் மிருகம் என்று குறிக்கிறது. இந்த Beast என்ற கம்ப்யூட்டர் உலகில் உள்ள அத்தனை பில்லியன் மக்களின் தகவல்களையும் கணக்கிடும் ஆற்றல் வாய்ந்ததாகும். European Union-ன் தலைமையக கட்டிடமான Berlaymont building ஒரு கவிழ்த்துவைக்கப்பட்ட சிலுவையின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து அந்திகிறிஸ்து செயல்படுவான் என்று தீர்க்கதரிசன ஆராய்சியாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

(தொடரும்)

Friday, August 15, 2008

காலம் கடத்தாதே...

சாத்தான்களின் மாநாடு

மானுடவர்க்கத்தை நாசமாக்க சாத்தான்களெல்லாம் கூடி ஒரு மாநாடு நடத்தின.
ஞானிகளான சில பிசாசுகள் தங்கள் ஆலோசனைகளைக் கூறின:

முதற்பிசாசு:

தலைவரவர்களே! கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று நாம் பிரச்சாரம் செய்யவேண்டும். கடவுளுக்குப் பயப்படுகிற பயம்மட்டும் இல்லாதுபோனால் மக்களை பம்பரம் போன்று ஆட்டிப் புடைக்கலாம்.

மாநாட்டுத் தலைவர்:
கூடவேகூடாது மிகச்சிலர்தான் இவ்யோசனையை அங்கீகரிப்பார்களே ஒழிய எல்லோரும் அங்கீகரிக்க மாட்டார்கள். வானம் , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைக் கண்டு கடவுள் ஒருவர் இருக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்வார்கள் ஆகவே உன் ஆலோசனை எடுபடாது.

இரண்டாவது பிசாசு:

எஜமானனே! பைபிள் தேவனுடைய வார்த்தை அல்லவென்று பிரச்சாரம் செய்வோம். மக்களின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டால் விசுவாசமே எடுபட்டுப்போம். அப்படியானால் எல்லோரும் நரகத்துக்கே போய் விடுவார்கள்.

தலைமைச் சாத்தான்:
இல்லவே இல்லை வெகு சிலரே இதனை நம்புவர். வேதம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது என்பதை மற்றும் அநேகர் நம்புகிறார்கள். ஆகவே அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உருப்படியாக இல்லை.

மூன்றாவது பிசாசு:
பேய்களின் பிரபுவே! இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் அல்லவென்று பிரச்சாரம் செய்வோமே! இவ்வெண்ணத்தை வேரூன்றச் செய்துவிட்டால் அவர்களுக்கு இரட்சகர் கிடைக்காது போய்விடும். யாவரும் வெகு எளிதாக நரகத்திற்குப் போய்விடுவர்.

பிசாசுகளின் பிரசிடெண்ட்:
தப்பு தப்பு! உன் யோசனையும் தகாது. பாலில் ஊறிய பழம் போலும், உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றும் "கிறிஸ்துவே இரட்சகர்" என்று ஊறிப்போயிருக்கிற கிறிஸ்தவர்களை ஏமாற்றமுடியாது. ஒரு சிலரே இதனை ஏற்றுக்கொள்வார்களே தவிர எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உபயோகமற்றது.

மேலும் பல பேய்கள் வேறு வேறு ஆலோசனைகளைக் கூறின. தலைமைச் சாத்தான் அங்கீகரிக்கவில்லை. இறுதியாய்ப் பெரிய பேய் ஒன்று அடக்கத்துடன் எழும்பி மிக அமைதலுடன் பேசியது:

"எஜமானே! தெய்வம் உண்டு; பைபிள் உண்மை; இயேசு தெய்வ குமாரன்; அவரே இரட்சகர் என்று தெளிவாய் சொல்வோம். ஆனால் இரட்சிக்கப்படுவதற்கு இன்னும் போதுமான காலம் இருக்கிறது. அதற்காக இப்போதே ஆத்திரப்பட
வேண்டாம் என்று பிரசங்கம் செய்வோம்."

முதன்மைச் சாத்தான்:
பேஷ்! சரியான யோசனை! இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என்று கோரவே எல்லாப் பிசாசுகளும் கரகோசம் செய்தன.

சாத்தான் இக்காலம் அனுஷ்டிக்கும் முறை இது தான். நாளை நாளை என்று காலம் கடத்தவே பிரயாசப் பட்டு வருகிறான். வீணாகக் காலத்தைக் கடத்தாது விழிப்பாய் இருப்போம். இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் சூரிய கடிகாரம் ஒன்று இருக்கிறது. அதில் "நீங்கள் என்னை வீணாகச் செலவழிக்கலாம், ஆனால் என்னை நீங்கள் நிறுத்திவிட முடியாது" என்று எழுதியிருக்கிறது.

"நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" - சங்கீதம் 90:12

"இதோ, இப்பொழுதே அனுக்கிரக காலம்; இப்பொழுதே இரட்சண்ய நாள்" - IIகொரிந்தியர் 6:2

Thursday, August 14, 2008

பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்

இதை படிக்கும் முன்பு இத்தொடரின் முதல் அத்தியாயத்தை படித்துக்கொள்ளவும்.
முதல் அத்தியாயம்

அந்திகிறிஸ்துவைக் குறித்து தானியேல் கூறுகிறார்:-

பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன் ஆட்சி காலத்தில் ஒரு சொப்பனம் காண்கிறான். இவன் கி.மு 606ல், பாபிலோலோனிய சாம்ராஜ்யத்தை ஆண்டவன். சொப்பனத்தை மறந்து போன நேபுகாத்நேச்சார் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் அறிய விரும்புகிறான். பாபிலோனிய ஞானிகளால் அது முடியாமற்போக தானியேல், ராஜாவிற்கு சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் கூற முன்வருகிறான். இச்சம்பவம் தானியேல் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நேபுகாத்நேச்சார் தன் கனவில் ஒரு சிலையை கண்டதாகவும், அச்சிலையின் தலை பசும்பொன்னும், அதன் மார்பும் புயங்களும் வெள்ளியும், அதன் வயிறும் அதன் தொடையும் வெண்கலமும், அதன் கால்கள் இரும்பும் அதன் பாதங்கள் பாதி களிமண்ணும் பாதி இரும்புமாய் இருந்தது,என்றும் ராஜா அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே கைகளினால் பெயர்க்கப்படாத கல் ஒன்று பெயர்ந்து வந்து அச்சிலையின் இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி அதை நொறுக்கிப் போட அந்த சிலை தூளாகி பதரைபோலாக, அந்த கல்லோ பெரிய பாறையாகி பூமியை நிரப்பிற்று என்றும் தானியேல் சொப்பனத்தைக் கூறி பின் அதன் விளக்கத்தையும் கூறுகிறான்.

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையின் தலை பசும் பொன்னாய் இருப்பது பாபிலோனிய சாம்ராஜ்யத்தை குறிப்பதாகவும் அதற்கு பிறகு சிலையின் வெள்ளியினாலான மார்பு, புயங்களும் இவற்றிற்கு ஒப்பான இன்னொரு சாம்ராஜ்யம் பாபிலோனிய சாம்ராஜியத்தை விட வலிமை குறைந்ததாய் எழும்புமென்றும் தானியேல் தெரிவிக்கிறான். தானியேலின் தீர்க்கதரிசனத்தில் படி பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்கு பிறகு மேதிய பெர்சிய வல்லரசு எழும்புகிறது. நேபுகாத்நேச்சாரின் மகனான பெல்ஷாத்ஷார் ஒரு நாள் இரவு பெரிய விருந்து பண்ணி தன் மறுமனையாட்டிகளுடனும், பிரபுக்களுடனும் குடித்து வெறித்திருக்கிறான். அன்றிரவில் ஒரு கை சுவற்றில் தோன்றி "மெனெ, மெனெ தெக்கேல் உப்பார்சின்" என்ற வார்த்தைகளை எழுத அதைப்பார்த்த ராஜாவின் முகம் வேறுபட்டது. அவனுடைய நினைவுகள் அவனை கலங்கப்பண்ணினது.அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளின் அர்த்தத்தை அறிய ராஜா விரும்புகிறான். பாபிலோனின் ஞானிகளால் அது முடியாமற்போக தானியேல் அவ்வார்த்தைகளுக்கான விளக்கத்தை கூற அழைக்கப்படுகிறான்.தானியேல் ராஜாவைப் பார்த்து தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுத்தப்பட்டு குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்யம் பிரிக்கப்ப்ட்டு மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது." என்று அவ்வார்த்தைகளுக்கான விளக்கத்தைக் கூற, அன்றிரவே பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட மேதியனாகிய தரியு ராஜ்யத்தைக் கட்டிக் கொண்டான். அச்சம்பவம் தானியேலின் ஐந்தாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு கொடுத்த விளக்கத்தின்படி மேதிய பெர்சிய அரசு உலக வல்லரசாக ஆள ஆரம்பிக்கிறது.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

Sunday, August 10, 2008

666- அந்திக் கிறிஸ்து யார்?

தன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் "அந்திக் கிறிஸ்துவின்" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான "Subject" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் "பாப் மங்கர்" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.

இவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுகிறது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.

இப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.

அந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட "ஜீன் டிக்சன்", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய "மீடியம்" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.