Friday, August 15, 2008

காலம் கடத்தாதே...

சாத்தான்களின் மாநாடு

மானுடவர்க்கத்தை நாசமாக்க சாத்தான்களெல்லாம் கூடி ஒரு மாநாடு நடத்தின.
ஞானிகளான சில பிசாசுகள் தங்கள் ஆலோசனைகளைக் கூறின:

முதற்பிசாசு:

தலைவரவர்களே! கடவுள் என்று ஒருவர் இல்லவே இல்லை என்று நாம் பிரச்சாரம் செய்யவேண்டும். கடவுளுக்குப் பயப்படுகிற பயம்மட்டும் இல்லாதுபோனால் மக்களை பம்பரம் போன்று ஆட்டிப் புடைக்கலாம்.

மாநாட்டுத் தலைவர்:
கூடவேகூடாது மிகச்சிலர்தான் இவ்யோசனையை அங்கீகரிப்பார்களே ஒழிய எல்லோரும் அங்கீகரிக்க மாட்டார்கள். வானம் , சூரியன், சந்திரன், நட்சத்திரங்களைக் கண்டு கடவுள் ஒருவர் இருக்கவேண்டும் என்று நிச்சயம் சொல்வார்கள் ஆகவே உன் ஆலோசனை எடுபடாது.

இரண்டாவது பிசாசு:

எஜமானனே! பைபிள் தேவனுடைய வார்த்தை அல்லவென்று பிரச்சாரம் செய்வோம். மக்களின் மனதில் இந்த எண்ணத்தை விதைத்துவிட்டால் விசுவாசமே எடுபட்டுப்போம். அப்படியானால் எல்லோரும் நரகத்துக்கே போய் விடுவார்கள்.

தலைமைச் சாத்தான்:
இல்லவே இல்லை வெகு சிலரே இதனை நம்புவர். வேதம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது என்பதை மற்றும் அநேகர் நம்புகிறார்கள். ஆகவே அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உருப்படியாக இல்லை.

மூன்றாவது பிசாசு:
பேய்களின் பிரபுவே! இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் அல்லவென்று பிரச்சாரம் செய்வோமே! இவ்வெண்ணத்தை வேரூன்றச் செய்துவிட்டால் அவர்களுக்கு இரட்சகர் கிடைக்காது போய்விடும். யாவரும் வெகு எளிதாக நரகத்திற்குப் போய்விடுவர்.

பிசாசுகளின் பிரசிடெண்ட்:
தப்பு தப்பு! உன் யோசனையும் தகாது. பாலில் ஊறிய பழம் போலும், உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றும் "கிறிஸ்துவே இரட்சகர்" என்று ஊறிப்போயிருக்கிற கிறிஸ்தவர்களை ஏமாற்றமுடியாது. ஒரு சிலரே இதனை ஏற்றுக்கொள்வார்களே தவிர எல்லோரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். உன் யோசனையும் உபயோகமற்றது.

மேலும் பல பேய்கள் வேறு வேறு ஆலோசனைகளைக் கூறின. தலைமைச் சாத்தான் அங்கீகரிக்கவில்லை. இறுதியாய்ப் பெரிய பேய் ஒன்று அடக்கத்துடன் எழும்பி மிக அமைதலுடன் பேசியது:

"எஜமானே! தெய்வம் உண்டு; பைபிள் உண்மை; இயேசு தெய்வ குமாரன்; அவரே இரட்சகர் என்று தெளிவாய் சொல்வோம். ஆனால் இரட்சிக்கப்படுவதற்கு இன்னும் போதுமான காலம் இருக்கிறது. அதற்காக இப்போதே ஆத்திரப்பட
வேண்டாம் என்று பிரசங்கம் செய்வோம்."

முதன்மைச் சாத்தான்:
பேஷ்! சரியான யோசனை! இதனை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என்று கோரவே எல்லாப் பிசாசுகளும் கரகோசம் செய்தன.

சாத்தான் இக்காலம் அனுஷ்டிக்கும் முறை இது தான். நாளை நாளை என்று காலம் கடத்தவே பிரயாசப் பட்டு வருகிறான். வீணாகக் காலத்தைக் கடத்தாது விழிப்பாய் இருப்போம். இங்கிலாந்தில் வேல்ஸ் நகரில் சூரிய கடிகாரம் ஒன்று இருக்கிறது. அதில் "நீங்கள் என்னை வீணாகச் செலவழிக்கலாம், ஆனால் என்னை நீங்கள் நிறுத்திவிட முடியாது" என்று எழுதியிருக்கிறது.

"நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்" - சங்கீதம் 90:12

"இதோ, இப்பொழுதே அனுக்கிரக காலம்; இப்பொழுதே இரட்சண்ய நாள்" - IIகொரிந்தியர் 6:2

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment