Thursday, November 20, 2008

ஆமேன் கர்த்தாவே வாரும்

பிரசவ வேதனையில் துடிக்கும் ஒரு பெண்ணின் மனநிலையில் இருக்கிறது பூமி . எப்போது குழந்தை பிறக்கும் எப்போது நான் கையிலெடுத்து அதை கொஞ்சுவேன் என அவள் மனம் துடித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிறிஸ்துவின் பிள்ளையின் மனநிலையும் அப்படியே. இவ்வுலக பாடுகளெல்லாம் வரப்போகும் மகிமைமுன் தூசியும் குப்பையுமே.

வெளிப்படுத்தல் 21-ம் அதிகாரம் நாம் ஒவ்வொருவரும் பெறப்போகும் ஒரு புதிய அனுபவத்தைப்பற்றி பேசுகிறது.
இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. மனுஷர்களிடத்திலே தேவன் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின;

என்ன ஒரு அனுபவம்! ஆமேன் கர்த்தாவே சீக்கிரமாய் வாரும்

Tuesday, November 18, 2008

காலம் குறுகியது

நாம் ஒரு அற்புதமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மனித குல வரலாற்றில் வேறெந்த காலத்திலும் இல்லாதவாறு இக்குறுகிய காலத்தில் பல்வேறு வேதாகம தீர்க்கதரிசன வசனங்கள் நம் கண்முன்னே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துவின் வருகைக்குமுன்னால் உலகத்தின் நிலை எப்படி இருக்கும் என அவ்வசனங்கள் சொல்லியுள்ளனவோ அப்படியே உலகத்தில் காரியங்கள் நடந்துவருகின்றன.கடந்த நூறு வருடங்களில் உலகம் கடந்து வந்த பாதையை இக்குறுகிய வீடியோவில் நீங்கள் காணலாம்.
மனிதன் விமானத்தில் பறக்க தொடங்கினான்.இரு உலகப் போர்கள், பஞ்சங்கள், வறுமைகள், மனிதனிடையே போட்டி பொறாமைகள், புயல், சூறாவளி ,பல அந்திகிறிஸ்துகள், சீறி பாய்ந்த எரிமலைகள், அறிவு பெருத்து போகுதல், இஸ்ரேல் ராஜ்யத்தின் உதயம், கணிப்பொறி கண்டுபிடிப்பு, உலகின் பலபகுதிகளில் குழப்பங்கள் , கொலைகள், வெறிகள், விண்வெளி பயணங்கள், பல சர்வாதிகாரிகள், வெடிக்கும் பீரங்க்கிகள், தொடரும் குண்டு வெடிப்புகள் இப்படி 100 ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் பல. உங்களுக்கு தெரியுமா? 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட மனிதனின் முக்கிய போக்குவரத்து வாகனமாய் இருந்தது குதிரைகள் மட்டுமே. இப்போது வாகனங்களும் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று மனிதன் விண்வெளிக்கும் சுற்றுலா போகிறான்.இவையெல்லாம் கடந்த 110 ஆண்டுகளுக்குள் நடந்து முடிந்தன.

தானியேல் 12:
4.அப்பொழுது (இறுதிகாலத்தில்) அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம்

மத்தேயு 24:
6. யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது.
7. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8. இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.

Monday, November 10, 2008

கண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா

அடிமையாய் எகிப்திலிருந்த இஸ்ரவேல் ஜனங்கள் மீட்கப்பட்டு மோசஸ் தலைமையில் பாலைவனவெளியில் வழிநடத்தப்பட்டு வந்தார்கள். அப்போது ஜனங்களுக்கு தண்ணீர் தாகம் எடுத்ததாகவும் அவ்விடத்தில் தண்ணீர் இல்லாததால் ஜனங்களெல்லாரும் மோசேயை பார்த்து முறுமுறுத்ததாகவும் பைபிளில் படிக்கிறோம். அப்போது மோசே கடவுள் கட்டளையிட்டபடியே அங்கிருந்த ஒரு கற்பாறையை அடிக்க அது இரண்டாக பிளந்து அதிலிருந்து தண்ணீர் புறப்பட்டது. ஜனங்களின் தாகத்தை தீர்த்தது. அந்த இடத்துக்கு மோசே மேரிபா என பேரிட்டதாக பைபிளில் படிக்கிறோம். இந்த இடம் இப்போது வேத ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடம் சவுதி அரேபியா நாட்டின் வடமேற்கு பகுதியில் Jebel el Lawz எனும் மலைப்பகுதியில் உள்ளது.இந்த மலையே அந்த கால சீனாய் மலை (ஓரேப்) எனவும் இங்கு தான் முட்செடியினோடே தேவன் மோசேக்கு தோன்றினார் எனவும் நம்பப்படுகிறது.

Google earth location


சில படங்கள்
யாத்திராகமம் 17 அதிகாரம்

1. பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.

2. அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான்.

3. ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டு வந்தீர் என்றார்கள்.

4. மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான்.

5. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ.

6. அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.

7. இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான்.