Thursday, August 14, 2008

பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்

இதை படிக்கும் முன்பு இத்தொடரின் முதல் அத்தியாயத்தை படித்துக்கொள்ளவும்.
முதல் அத்தியாயம்

அந்திகிறிஸ்துவைக் குறித்து தானியேல் கூறுகிறார்:-

பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ராஜாவான நேபுகாத்நேச்சார் தன் ஆட்சி காலத்தில் ஒரு சொப்பனம் காண்கிறான். இவன் கி.மு 606ல், பாபிலோலோனிய சாம்ராஜ்யத்தை ஆண்டவன். சொப்பனத்தை மறந்து போன நேபுகாத்நேச்சார் சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் அறிய விரும்புகிறான். பாபிலோனிய ஞானிகளால் அது முடியாமற்போக தானியேல், ராஜாவிற்கு சொப்பனத்தையும் அதன் அர்த்தத்தையும் கூற முன்வருகிறான். இச்சம்பவம் தானியேல் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நேபுகாத்நேச்சார் தன் கனவில் ஒரு சிலையை கண்டதாகவும், அச்சிலையின் தலை பசும்பொன்னும், அதன் மார்பும் புயங்களும் வெள்ளியும், அதன் வயிறும் அதன் தொடையும் வெண்கலமும், அதன் கால்கள் இரும்பும் அதன் பாதங்கள் பாதி களிமண்ணும் பாதி இரும்புமாய் இருந்தது,என்றும் ராஜா அச்சிலையைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே கைகளினால் பெயர்க்கப்படாத கல் ஒன்று பெயர்ந்து வந்து அச்சிலையின் இரும்பும் களிமண்ணுமாகிய அதன் பாதங்களில் மோதி அதை நொறுக்கிப் போட அந்த சிலை தூளாகி பதரைபோலாக, அந்த கல்லோ பெரிய பாறையாகி பூமியை நிரப்பிற்று என்றும் தானியேல் சொப்பனத்தைக் கூறி பின் அதன் விளக்கத்தையும் கூறுகிறான்.

நேபுகாத்நேச்சார் சொப்பனத்தில் கண்ட சிலையின் தலை பசும் பொன்னாய் இருப்பது பாபிலோனிய சாம்ராஜ்யத்தை குறிப்பதாகவும் அதற்கு பிறகு சிலையின் வெள்ளியினாலான மார்பு, புயங்களும் இவற்றிற்கு ஒப்பான இன்னொரு சாம்ராஜ்யம் பாபிலோனிய சாம்ராஜியத்தை விட வலிமை குறைந்ததாய் எழும்புமென்றும் தானியேல் தெரிவிக்கிறான். தானியேலின் தீர்க்கதரிசனத்தில் படி பாபிலோனிய சாம்ராஜ்யத்திற்கு பிறகு மேதிய பெர்சிய வல்லரசு எழும்புகிறது. நேபுகாத்நேச்சாரின் மகனான பெல்ஷாத்ஷார் ஒரு நாள் இரவு பெரிய விருந்து பண்ணி தன் மறுமனையாட்டிகளுடனும், பிரபுக்களுடனும் குடித்து வெறித்திருக்கிறான். அன்றிரவில் ஒரு கை சுவற்றில் தோன்றி "மெனெ, மெனெ தெக்கேல் உப்பார்சின்" என்ற வார்த்தைகளை எழுத அதைப்பார்த்த ராஜாவின் முகம் வேறுபட்டது. அவனுடைய நினைவுகள் அவனை கலங்கப்பண்ணினது.அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது. அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. சுவரில் எழுதப்பட்ட வார்த்தைகளின் அர்த்தத்தை அறிய ராஜா விரும்புகிறான். பாபிலோனின் ஞானிகளால் அது முடியாமற்போக தானியேல் அவ்வார்த்தைகளுக்கான விளக்கத்தை கூற அழைக்கப்படுகிறான்.தானியேல் ராஜாவைப் பார்த்து தேவன் உன் ராஜ்ஜியத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுத்தப்பட்டு குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்யம் பிரிக்கப்ப்ட்டு மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது." என்று அவ்வார்த்தைகளுக்கான விளக்கத்தைக் கூற, அன்றிரவே பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட மேதியனாகிய தரியு ராஜ்யத்தைக் கட்டிக் கொண்டான். அச்சம்பவம் தானியேலின் ஐந்தாம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தானியேல் நேபுகாத்நேச்சாரின் சொப்பனத்திற்கு கொடுத்த விளக்கத்தின்படி மேதிய பெர்சிய அரசு உலக வல்லரசாக ஆள ஆரம்பிக்கிறது.

-தொடரும்.

டாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் "666- அந்திக் கிறிஸ்து யார்?" என்ற புத்தகத்திலிருந்து.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment