Wednesday, January 20, 2010

பிற புற தீர்க்கதரிசனங்கள்


வேதாகமத்திலிருக்கும் ஏராளமான தீர்க்கதரிசனங்கள் நம் கண்முன்னாக நிறைவேறுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேதாகமம் அல்லாது பிற மார்க்கங்களில் அல்லது பிற நபர்கள் எடுத்துக் கூறின அல்லது கூறிக்கொண்டிருக்கிற தீர்க்கதரிசனங்கள் பல நம் வேதாகமத்தை ஒத்திருக்கிறதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இதுவும் சாத்தானின் ஒரு வித தந்திரமே. வேதத்திலிருந்து ஜனங்களின் பார்வையை திசைதிருப்ப அவன் கையாடும் யுத்தி. வேதம் சொல்லியிருக்கும் சம்பவங்களையே எடுத்துக் கூறி அதை தனக்கு ஆதாயமாக சமைத்து வழங்க அவன் முயற்சித்திருக்கிறான்.

கீழே சில, பிற நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களும் அதற்கு சமமாக நமது வேத புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வருங்கால நிகழ்வுகளும்.

1.நாஸ்ட்ரடாமஸ் எனும் பிரெஞ்சுக்காரர், பிரபல, உலகம் நன்கு அறிந்த தீர்க்கதரிசனவாதி. இவரது புத்தகத்தில் செஞ்சுரி 10, குவாட்ரெயின் 74 என்ற பகுதி இப்படியாக சொல்கிறது.”அந்த மாபெரும் ஏழாம் எண் ஆண்டு முடிவுக்கு வந்ததும், ஒரு மிகப்பெரிய யுத்தவிளையாட்டின் முடிவில், மாபெரும் நூற்றாண்டு தொடங்கும் சிலகாலம் முன்னரே மரித்தவர்கள் கல்லறையைவிட்டு எழுந்திருப்பார்கள்”

வேதாகமத்தில் I தெசலோனிக்கேயர் 4:16 இப்படியாக சொல்கிறது. ”ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.”

2.இஸ்லாமியர்களின் ஹதீஸ் எனும் நூலில் இமாம் மஹ்தீ என்பவர் பூமியில் ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிவார் என சொல்லப்பட்டிருக்கிறது.இவர் உலக அழிவுக்கு முன்பாக இவ்வுலகிற்கு வருவார் எனவும். இன்னும் தெளிவாக ஈஸா (இயேசு) அவர்களுக்கு முன்பாக வருகை தருவார் எனவும் சொல்கிறது.(அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ(ரலி), நூல்: அபூதாவூது 4272)

வேதாகமத்தில் இயேசுக்கு முன்பாக பூமியில் வந்து ஏழு ஆண்டுகள் ஆட்சிசெய்பவரை, அது அந்திக்கிறிஸ்து என்கிறது.

3.புதுயுக ஆன்மீகவாதியாக கருதப்படும் ஓசே ஆர்கெல்லஸ் என்பவர் சொல்லும் போது, உலகம் ஒரு மிகப்பெரிய மாறுதலுக்கு தயாராகுவதாகவும் அதற்கு 144,000 நபர்கள் தேவைப்படுவதாகவும் கூறியிருக்கிறார். அப்படியான மாறுதலுக்கு தயாராக இல்லாத மனிதர்களை வெள்ளி கப்பல்கள் வந்து கொண்டுபோய் விடும் எனவும் கூறியிருக்கிறார். இங்கு வெள்ளிக்கப்பல்கள் என அவர் குறிப்பிடுவது பறக்கும் தட்டுகளை குறிப்பவனவாக இருக்கலாம்.

வேதாகமத்தில் வெளி 14:3 இப்படியாக சொல்கிறது “அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் ஒருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது.”
ஜனங்கள் ”பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்படுவதை” இவர் வெள்ளிக்கப்பல்கள் வந்து கொண்டுபோய்விடும் என்கிறாரோ.

4.மாயர்களின் தெய்வமாகக் கருதப்படும் கார்சகொடில் (Quetzalcoatl),இன்றைக்கும் மெக்சிகோ பகுதிகளில் பிரபலம்.இப்பெயரின் பொருள் இறக்கைகள் கொண்ட சர்ப்பம் என்பதாகும். இத்தெய்வம் உலகின் இறுதிக்காலங்களில் பூமிக்கு வந்து உலகமக்களை நியாயம் தீர்க்கும் என நம்புகிறார்கள்.

வேதம் சொல்கிறது.சங்கீதம் 98:9 ”கர்த்தர் பூமியை நியாயந்தீர்க்கவருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.”
இங்கேயும் சாத்தான் காப்பி அடித்திருக்கிறான்.

இப்படியாக ஏற்கனவே இருக்கும் குழப்பத்தில் குட்டையை குழப்பி இன்னும் சில மீன்களை பிடிக்க பார்க்கிறான் பிசாசு. கர்த்தர் தாமே நாம் நன்கு இவற்றை பகுத்தறிய தெளிந்த புத்தியை தந்தருள்வாராக.

I யோவான் 5:20 நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்.

எபேசியர் 6:11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment