"...சீஷர்கள் அவரிடத்தில் (இயேசுவினிடத்தில்) தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.'' மத்தேயு 24:3.
ஒரு நாவலோ, அல்லது ஒரு திரைப் படமோ முடிவதற்கு முன்பாக நிகழும் காட்சிகளுக்கு, ""கிளைமேக்ஸ்'' என்று பெயர். கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு எப்போதுமே வேகமும்,விவேகமும், விறுவிறுப்பும் அதிகம். கொட்டாவி விட வைக்கும் கதைகள்கூட, முடிவை நெருங்கும்போது, தன் வேகத்தைக் கூட்டிக் கொள்ளும்!காட்சிகள் ஒவ்வொன்றும் பரபரப்பாக நகரும்! தற்சமயம் உலகத்தில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்ப்பீர்களேயானால், ""அவைகள் கிளைமேக்ஸ் காட்சிகளுக்குக் கொஞ்சமும் சளைத்தவைகளல்ல...'' என்பீர்கள். சொல்லப் போனால்,கிளைமேக்ஸ் காட்சிகளெல்லாம் இப்போது நடைபெறும் சம்பவங்களுக்கு முன்னால் பிச்சையெடுக்க வேண்டும். அத்தனை பரபரப்பு! அத்தனை பயங்கரம்! "சீறிப் பாயும் எரிமலைகள், கொந்தளிக்கும் கடலலைகள், சுழன்றடிக்கும் சூறாவளிகள், ஊரையே விழுங்கும் நில நடுக்கங்கள்...' என்று, இயற்கை சார்ந்த பயங்கரங்கள் ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்க, இன்னொரு புறத்தில், "பஞ்சம், கொள்ளை நோய்கள், விபத்துகள்...' என்று, ஆட் கொல்லிப் பயங்கரங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன.
சாத்தான் ஒரு புறமும், கர்த்தர் மறு புறமும் தங்கள் முழு பெலத்தோடு காரியங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்க...உலகம் தழுவிய கிளைமேக்ஸ் காட்சிகள் அங்கிங்கெனாதபடி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்ததுதான்; கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு அடுத்து,கதை முடிந்து விடும். ""உலகில் அரங்கேறும் இத்தனை பயங்கரங்களை அடுத்து, எந்தக் கதை முடியப் போகிறது?'' என்பீர்கள். ஒரு கதை முடியப் போவதற்கு முன்பாக வரும் காட்சிகளை வைத்தே, ""கதை முடியப் போகிறது...'' என்பது நமக்குத் தெரிந்து விடும். ஆனால், உலகம் முடியப் போவதற்கு முன்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கோ; உடனடியாக அப்படித் தீர்மானிக்க முடிவதில்லை. காரணம், கதையை நாம் வெளியிலிருந்து பார்க்கிறோம்.உலகத்தின் கடைசிக் கால நிகழ்வுகளிலோ நாமும் சம்பந்தப்பட்டிருக்கிறோம்! நாமே சம்பந்தப்பட்ட காரியங்களில்கூட, நல்லது,கெட்டது, துவக்கம்,முடிவு போன்றவையயல்லாம் நமக்குச் சட்டென்று புலப்படுவதில்லை. சதுரங்கம் (CHESS) விளையாடுகிறவர்களைக் கவனித்திருக்கிறீர்களா? சுற்றி நின்று அந்த விளையாட்டை வேடிக்கை பார்க்கிறவர்களுக்குத் தெரிகிற அளவுக்குக்கூட, விளையாடுகிறவர்களுக்கு, தாங்கள் பிடிபடப் போவது தெரிவதில்லை. உலகத்தின் முந்தைய நிகழ்ச்சிகளில் நாமும் பங்கு பெற்றிருப்பதால், உலகத்தின் முடிவு பற்றி நமக்குச் சட்டென்று விளங்குவதில்லை. இதன் காரணமாகத்தான், உலகம் முடியப் போவதற்கு முன்பாக நிகழப் போகும் கிளைமேக்ஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி, இயேசு நமக்கு விலாவாரியாக விளக்கிச் சொல்லியிருக்கிறார். தான் உலகத்திலிருந்தபோது சொன்னது போதாதென்று, தன் தாசனாகிய யோவான் வழியாகவும், கடைசிக் கால நிகழ்வுகள் பற்றி விளக்கிச் சொல்லியிருக்கிறார். நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளில், முடிவுக்கு முந்தைய கிளைமேக்ஸ் காட்சிகள் என்னென்ன? என்பது பற்றி, உங்களுக்குக் கோடிட்டுக் காட்டுவதுதான், இந்தக் கட்டுரைகளின் நோக்கம்.வெளியே பார்க்க சாதாரணமாகத்தான் இருக்கும். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால்தான்,""அது கிளைமேக்ஸ் காட்சி!'' என்று தெரியும்.
அப்படி ஒரு கூர்மையான பார்வையில் நிகழ்ந்து வரும் நிகழ்வுகளை, உங்களைப் பார்க்க வைக்கத்தான் இந்தக் கட்டுரை முயற்சி. முடியப் போகும் உலகத்தின் முடிவுக்கு முன்னால் நடைபெறும் நிகழ்ச்சிகளை, இயேசு, தம்முடைய சீடர்களுக்குப் பல இடங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார். என்றாலும், அவர் அதிகமாகச் சொன்னது, மத்தேயு 24ம் அதிகாரத்திலும், லூக்கா 21ம் அதிகாரத்திலும்தான் காணப்படுகிறது. இவ்விரண்டு அதிகாரங்களிலும், அவர், முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் காட்சிகளை வரிசைப்படுத்தி, மிகவும் நேர்த்தியாகக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசு மாத்திரமல்ல,இயேசுவுக்கு முன்னும், பின்னும் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளும்கூட,உலகத்தின் முடிவுக்கு முந்தி நிகழப் போகும் காரியங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஏன்? தாவீதுகூட, தன் சங்கீதத்தில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறார் என்றால்; பார்த்துக் கொள்ளுங்களேன்! இப்படியாக, எல்லோருமே உலகத்தின் முடிவு பற்றிப் பேசியிருக்க, அல்லது தீர்க்கதரிசனம் உரைத்திருக்க, இவர்களுக்கு நடுவில், அதிகமாக இவைகளைப் பற்றிப் பேசும் சில தீர்க்கதரிசிகளை மாத்திரம், நீங்கள் குறிப்பாக நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. அப்படிச் சொல்ல வேண்டுமானால், "தானியேல்', "எசேக்கியேல்', "சகரியா' என்று, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளையும், "பவுல்', "யோவான்', "பேதுரு' என்று, புதிய ஏற்பாட்டு ஊழியர்களையும் குறிப்பிடலாம். முடிவுக்கு முந்தைய காரியங்களை, அல்லது வருகையின் காரியங்களைப் பற்றி அதிகம் அறிய வேண்டுமானால், இவர்களிலும்,குறிப்பாக, "தானியேல்',"எசேக்கியேல்', "சகரியா', "யோவான்' போன்றவர்களின் புத்தகங்களைத்தான் நீங்கள் அதிகம் நாட வேண்டியிருக்கும். பரிசுத்த வேதாகமம் முழுக்கச் சொல்லப்பட்டிருக்கும் கடைசிக் கால அடையாளங்களை ஆராய்ந்து பார்த்தால், அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம் என்று தெரியும்.
1. தேவனுடைய கிரியைகளில் காணப்படும் அடையாளங்கள்.
2. சாத்தானுடைய கிரியைகளில் காணப்படும் அடையாளங்கள்.
3. மனிதர்களில் காணப்படும் அடையாளங்கள்.
4. இயற்கையில் காணப்படும் அடையாளங்கள்.
5. சமுதாயத்தில் காணப்படும் அடையாளங்கள்.
""அடையாளங்கள்'' என்று நான் குறிப்பிட்டிருப்பது முழுவதும் கிளைமேக்ஸ் காட்சிகள். அதாவது, முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் நிகழ்வுகள். முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் நிகழ்வுகளை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலாவது நீங்கள், பரிசுத்த வேதாகமத்தையும், உங்களைச் சுற்றிலும் நடைபெறும் நிகழ்வுகளையும் உற்றுப் பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும்.இரண்டாவது, நீங்கள் உற்றுப் பார்த்த இவ்விரண்டு நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்க்க
வேண்டும். இது இரண்டுமே இருந்தாலும்கூட, அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்ப்பதில், அநேகர் கவனமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இதுதான் குறையே! இந்த மூன்றையும் நீங்கள் சம அளவில் பாவித்தால், நம்மைச் சுற்றிலும் நடைபெற்று வருவது, கடைசிக் காலநிகழ்வுகள் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஏன் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்?காரணம் இருக்கிறது! ஒவ்வொரு முடிவுக்குப் பின்னும் ஒவ்வொரு ஆரம்பம் இருக்கிறது. உலகத்தின் முடிவுக்குப் பிறகும் ஒரு
ஆரம்பம் இருக்கிறது. உலக ராஜ்ஜியம் முடிகிறது! தேவனுடைய ராஜ்ஜியம் துவங்குகிறது! உங்கள் புரிந்து கொள்ளுதல், இனி வரப் போகும் புதிய ஆரம்பத்திற்கு நீங்கள் ஆயத்தப்பட,உங்களைத் துரிதப்படுத்துகிறது.முடிவுக்கு முன்னால் நடைபெறப் போகும் நிகழ்வுகளில் நீங்கள் சேதமடையாதபடி உங்களைக் காத்துக் கொள்ள உதவுகிறது."உலகம் முடியப் போகிறது!' என்பதே, பலருக்கு சிரிப்பான செய்தியாக இருக்கிறது. விஞ்ஞானிகள்கூட, "உலகம் முடிவுக்குட்பட்டது!' என்பதை நம்புவதில்லை. சில விஞ்ஞானிகள் மாத்திரம், ""உலகம் முடியலாம்! ஆனால், இப்போதைக்கு இல்லை. இன்னும் ஐம்பதாயிரம் கோடி வருடங்கள் ஆகும்!'' என்கிறார்கள்.
இதற்கு ஆதாரம் கேட்டீர்களானால், சுமார் நானூறு பக்கத்துக்கு கட்டுரை சமர்ப்பிப்பார்கள். எது எப்படியோ! ""உலகம் அழிவுக்குட்பட்டது என்பதை விஞ்ஞானிகள் சொல்வதைவிட, அதை உருவாக்கியவர் சொல்வதுதான் உசிதமானது'' என்பேன். உலகத்தை உருவாக்கியவர் இயேசுதான் என்று நீங்கள் நம்பினால், உலகத்தின் முடிவு பற்றி அவர் சொல்வதையும் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். உலகத்தின் முடிவு பற்றி இயேசு சொல்லும்போது, இரண்டு நிகழ்வுகளைச் சம்மந்தப்படுத்திச் சொல்கிறார். ஒன்று, அவருடைய வருகை! மற்றொன்று, உலகத்தின் முடிவு!
இயேசுவிடம் அவருடைய சீடர்கள் உலகத்தின் முடிவு பற்றி விசாரிக்கும்போது, அவருடைய வருகையையும் சேர்த்தே விசாரித்தார்கள். ""பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்ல வேண்டும் என்றார்கள்.'' மத்தேயு 24:3.
இயேசு வரட்டும். நல்லது. ஆனால், உலகம் ஏன் அழிய வேண்டும்?
உலகம் அழியக் காரணம் இருக்கிறது. கர்த்தர் உலகத்தைப் படைத்தபோது எல்லாவற்றையும், "நல்லது...நல்லது' என்று பார்த்துப் பார்த்துப் படைத்தார். தான் நல்லதாகவே உண்டாக்கிய உலகத்தை மனிதர்களின் கையில் கொடுத்தார். மனிதர்களோ, தேவனை விட்டு விலகி, சாத்தானுக்குக் கீழ்படிந்ததால், உலகம் முழுவதும் சாத்தானின் ஆளுகையின் கீழ் வந்து விட்டது. தன் ஆளுகையின் கீழ் வந்து விட்ட உலகத்தை, சாத்தான் தனக்கு ஏற்ற விதங்களில் மாற்றியமைத்துக் கொண்டான். தேவன் ஏற்படுத்தி வைத்த பல காரியங்களை பாவ காரியங்களாக மாற்றிக் கொண்டான். மனிதர்களை, தான் மாற்றியமைத்த இந்தப் பாவக் காரியங்கள் மூலம் அடிமைப்படுத்தி, தொடர்ந்து அவர்கள் தனக்கே அடிமைகளாக இருக்கும்படிபார்த்துக் கொண்டான்.
மனிதர்கள், தன் பிடியை விட்டு விலக நேரிடும் போதெல்லாம் அவர்களை பயமுறுத்தியோ, அல்லது, தான் மாற்றி வைத்திருக்கும் பாவக் காரியங்களைக் காட்டி மயக்கியோ,அவர்களை தன் பிடியிலிருந்து விலகாமல் பார்த்துக் கொண்டான். நான் நேசித்த மனிதனுக்காக, பார்த்துப் பார்த்து படைத்த பூமி, இப்போது சாத்தானின் கைகளில் சிக்கி அசுத்தமாக்கப் பட்டிருப்பதைக் கண்டு, கர்த்தர் வேதனைப்பட்டார். அது மாத்திரமல்ல, தன் சாயலாக உருவாக்கிய மனிதன், தன் சத்துருவாகிய சாத்தானுக்கு அடிமையாகி, கை கட்டி, வாய் பொத்தி, சேவகம் செய்வதைப் பார்த்து இன்னும் துக்கப்பட்டார். இதனால்,சாத்தானை அழித்து, உலகத்தை மீண்டும் மனிதர்களின் கையில் கொடுக்கக் கர்த்தர் சித்தமானார். ஆனால், அவருடைய நீதியின்படி இப்போது சாத்தானை அழிக்க வேண்டுமானால், அவனுக்குக் கீழ்பட்டிருக்கும் மனிதனையும் சேர்த்தேதான் அழிக்க வேண்டி வரும். ஒட்டு மொத்த மனிதர்களும் அழிந்து போனால், தான் உலகத்தை மீட்டுக் கொண்டதற்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும். எனவே, தேவன் இதற்கும் ஒரு திட்டம் செய்தார்.
சாத்தான் கையிலிருக்கும் உலகத்திலிருந்து ஒரு கூட்டம் மனிதர்களை விடுவித்து, அவர்களை பரிசுத்த சந்ததியாகப் பாதுகாத்து, அவர்களைக் கொண்டு, இனி, தான் உருவாக்கப் போகும் புதிய வானத்தையும், புதிய பூமியையும் நிரப்ப விரும்பினார். மனிதர்களை விடுவிக்கவும், பரிசுத்தமாக்கவும் அவருக்குப் பரிசுத்தமான ஒரு இரத்தம் தேவைப்பட்டது. அதற்காக, தாமே மனித அவதாரமெடுத்து தன்னுடைய இரத்தத்தைச் சிந்தினார்.தம் இரத்தத்தை விசுவாசித்து ஏற்றுக் கொண்டவர்களை, தமது இரத்தத்தால் கழுவி சுத்திகரித்து, நாம் விரும்பும் பரிசுத்த சந்ததியாக்கினார். இனி அவர், உலகத்தை சாத்தானின்
கையிலிருந்து கைப்பற்ற வேண்டும். தாம் கைப்பற்றின பூமியை அப்படியே மனிதர்களின் கையில் கொடுத்துவிட முடியாது. காரணம், அதில் முழுவதும் சாத்தானின் அசுத்தங்கள் நிரம்பியுள்ளன. எனவே, அதை நெருப்பினால் சுட்டெரித்து விட்டு, அதிலிருந்து ஒரு புதிய வானத்தையும், புதிய பூமியையும் உண்டாக்க வேண்டும். அப்படி உண்டாக்கின பூமியில் தன் ஜனங்களைக் குடியமர்த்த வேண்டும். அவரே அதன் மேல் ராஜாவாக ஆளுகை செய்ய வேண்டும். பூமியை கர்த்தர் மனிதர்களுக்குக் கொடுத்து விட்டதால், அதன் மேல் ராஜாவாக ஆளுகை செய்யப் போகிறவரும், மனுஷகுமாரனாகத்தான் இருக்க வேண்டும். எனவேதான் இயேசு, மனித அவதாரமாக வெளிப்பட்டார். இயேசு, மனுஷ குமாரனாக வெளிப்பட்டதற்குப் பல நோக்கங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.
""ஏன் மனிதர்களில் ஒருவரையே தெர்ந்தெடுத்து, அவரை ராஜாவாக்கக் கூடாதா?'' என்பீர்கள். ஒருமுறை மனிதர்களின் கையில் ஆளுகையைக் கொடுத்ததால், பூமியைப் பறி கொடுத்து, ஒட்டு மொத்த மனுக் குலமுமே பட்ட பாடு போதாதா? அதனால்தான் மனுஷ குமாரனாக வெளிப்பட்ட இயேசுவே உலகத்தை ஆளுகை செய்யும் ராஜாவாக வெளிப்படப் போகிறார். திட்டம் மிகவும் பெரியது. மனிதன் செய்த பாவத்தினால் உண்டான விளைவை சரி செய்ய,கர்த்தர் என்னவெல்லாம் பாடுபட வேண்டியிருக்கிறது பாருங்கள்!
சரி, சொல்ல வந்த விஷயத்தை விட்டு டிராக் மாறுகிறேன்; பாருங்கள். என்ன சொல்ல வந்தேன்? சாத்தானால் தீட்டுப்படுத்தப்பட்ட பூமியைக் கர்த்தர் நெருப்பினால் சுத்திகரித்து, அழிக்க வேண்டும். இதைக் குறித்து பரிசுத்த வேதாகமம், பூமியானது நெருப்புக்கு இரையாக வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது (2 பேதுரு 3:7). இப்பொழுது இருக்கிற வானமும், பூமியும் தீக்கிரையாகி ஒழிந்து போவதே முடிவு. கறை திரையற்ற புதிய வானமும், புதிய பூமியும் தோன்றுவதே முடிவுக்குப் பின்வரும் ஆரம்பம். முடிவுக்கு முன்னால் வரும் கிளைமாக்ஸ் காட்சிகளை இனித் தொடர்ச்சியாக ஆராயலாம். கிளைமாக்ஸ் காட்சிகள் ஒவ்வொன்றின் வேகத்தையும், பயங்கரத்தையும் பார்த்தால், முடிவு வெகு சமீபம் என்று உணர்வீர்கள். இனி காட்சிகளுக்குள் போகலாமா?
கிளைமாக்ஸ்-1 துளிர் விடும் அத்திமரம்
உலகத்தின் முடிவுக்கு முன்பாக நடைபெறும் கிளைமாக்ஸ் காட்சிகளில் முக்கியமானது, அத்தி மரம் துளிர்ப்பது! ""அத்தி மரம் துளிர்ப்பதில் அப்படி என்ன அதிசயம்? அதுதான் வருஷா வருஷம் துளிர்க்கிறதே!'' என்று நீங்கள் நினைப்பீர்களேயானால், ""நீங்கள் இன்னும் கொஞ்சம் பரிசுத்த வேதாகமத்தை ஆழமாகப் படிக்க வேண்டும்'' என்பேன். காரணம், குறிப்பிடப்பட்டிருக்கும், ""அத்தி மரம்'' என்பது, பூப்பூத்து, காய் காய்க்கும் ஒரு சாதாரண மரமல்ல. - அது ஒரு தேசம்! ""இஸ்ரேல்'' என்பது, அந்த தேசத்தின் பெயர். அது, பூர்வ காலத்தில் தேவன் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்காகத் தேர்ந்தெடுத்த தேசம். அந்த தேசம்தான், ""அத்தி மரம்'' என்று, பரிசுத்த வேதாகமத்தில் உவமையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
உவமைக் காரியங்களைக் கொண்டு தேசங்களை அடையாளப்படுத்துவது, இன்றைக்கும் நாடுகளிடையில் இருக்கும் நடைமுறைதான். "கழுகு' அமெரிக்காவையும், "கரடி' ரஷ்யாவையும், "மயில்' இந்தியாவையும், "டிராகன்' சீனாவையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.அதே போலத்தான், யூதர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அத்தி மரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அத்தி மரம் மாத்திரமல்ல, யூதர்களை அடையாளப்படுத்த ஒலிவ மரமும், திராட்சைச் செடியும்கூட உவமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அத்தி மரத்தை யூதர்களின் அரசியல் வாழ்க்கைக்கும், ஒலிவ மரத்தை யூதர்களின் சமுதாய வாழ்க்கைக்கும், திராட்சைச் செடியை யூதர்களின் மத சம்மந்தமான வாழ்க்கைக்கும் அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள்.
இயேசு, தன்னுடைய வருகை எப்போது இருக்கும் என்பதைப் பற்றித் தெரிவிக்கும்போது, பல அடையாளங்களை முன்னறிவிக்கிறார். அதில் ஒன்றுதான், இந்த அத்தி மரம் துளிர்க்கும் அடையாளம். இதைக் குறித்து, பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 29:29-31 வரை உள்ள வேத வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ""அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரத்தையும் பாருங்கள். அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். '' லூக்கா 21:29-31.
""அத்தி மரமும், மற்றெல்லா மரங்களும் துளிர்க்கிறதைப் பார்க்கும்போது, தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்றென்று அறிவீர்கள்'' என்று சொல்லப் பட்டிருப்பதிலிருந்து, இந்த இடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மரங்களும், அத்தி மரமும் நிச்சயமாக எழுத்தின்படியே நாம் காணும் அத்தி மரமோ, அல்லது மற்ற மரங்களோ அல்ல என்று தெரிகிறது. இங்கே சொல்லப்பட்டிருக்கும் அத்தி மரமும், மற்றெல்லா மரங்களும் யூத தேசத்தையும், மற்ற தேசங்களையும் குறிக்கிறது.
நீங்கள் பரிசுத்த வேதாகமத்தை நுணுக்கமாக வாசித்துப் பார்த்தால், யூதர்களின் வரலாற்றுக்கும், தேவனுடைய திட்டங்களுக்கும் ஒரு கிரமமான சம்மந்தம் இருப்பதை உங்களால் காண முடியும். இந்த தேசத்து வரலாற்றின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும், தேவனுடைய திட்டங்களுக்கும் இருக்கும் சம்மந்தம் மிகவும் ஆச்சரியமானது. எனவேதான், யூதர்களின் வரலாற்றை நாம் மிக நுணுக்கமாகக் கவனிக்க வேண்டியதிருக்கிறது.
""யூதா துளிர்க்கும்...'' என்று எழுதியிருப்பதிலிருந்து அதுவரை அது இலையற்று , காய்ந்து போய் இருந்திருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. யூதர்களின் வரலாற்றை நாம் ஆராய்ந்து பார்த்தால் இதுவரைக்கும் மூன்று முறைகள் அவர்கள் பட்டுப் போய், பின்னர் துளிர்த்திருக்கிறதைத் தெரிந்து கொள்ள முடியும்.
யூதர்கள் மூன்று முறை தங்கள் தேசத்திலிருந்து வெளியேறி, அல்லது வெளியேற்றப்பட்டு, அடிமைகளாக இருந்து, பின்னர் தங்கள் தாயகம் திரும்பியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு முறை தங்கள் சொந்த தேசத்திற்குத் திரும்பி வரும்போதும், தேவாதி தேவனுடைய முக்கியமான திட்டங்களில் ஒவ்வொன்று நிறைவேறியிருக்கிறது! அவர்கள் ஒவ்வொரு முறை தங்கள் தேசத்தை விட்டு வெளியேறிய சம்பவமும் ஏதோ ஒரு எதேச்சையாக நடந்ததாயிராமல், தேவனால் முன்னறிவிக்கப்பட்டே நடந்திருக்கிறது. அதன் ஒவ்வொரு சம்பவங்களிலும் தேவனுடைய தீர்மானமும், திட்டமும் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. யூதர்கள் இதுவரை மூன்று முறை தங்கள் தேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். மூன்று முறை திரும்பி வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமுக்கு, தேவன் இந்த தேசத்தை வாக்களித்தார். கர்த்தருடைய வழிநடத்துதலின்படி, ஆபிரகாம், தன்னுடைய, "ஆரான்' என்கிற தேசத்திலிருந்து புறப்பட்டு, "கானான்' என்கிற இந்த தேசத்தில் குடியேறினார். அப்போதிலிருந்து யோசேப்பின் காலம் வரைக்கும் இவர்கள் இங்கேதான் இருந்தார்கள்.
பின்னர், யோசேப்பின் காலத்தில்தான் இவர்களுடைய முதல் பெயர்ச்சி நடைபெற்றது. யோசேப்பின் உடன் பிறந்த சகோதரர்களான யாக்கோபின் புத்திரர்கள், யோசேப்பின் மேல் பொறாமை கொண்டு, அவரை மீதியான் தேசத்து வியாபாரிகளின் கைகளில் விற்றுப்போட, அவர்கள் யோசேப்பை எகிப்தில் விற்று விட்டார்கள். எகிப்தில் யோசேப்பு சில காலம் அடிமையாக வேலை செய்து, கடைசியில் எகிப்திலும், சுற்றிலுமுள்ள நாடுகளிலும் தோன்றப் போகும் பஞ்சத்தைக் குறித்து பார்வோன் கண்ட சொப்பனத்திற்கு அர்த்தம் சொன்னதின் மூலம், எகிப்திய ராஜாவால் உயர்த்தப்பட்டு, தேசத்தின் உணவு நிலையைக் கண்காணித்துக் கொள்ளும் அதிகாரியாக யோசேப்பு நியமிக்கப்பட்டார். யோசேப்பினுடைய புத்திசாலித்தனமான திட்டங்களால், பின்னர் வந்த ஏழு வருடப் பஞ்சம் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் எதிர்கொள்ளப்பட்டது. பஞ்சக் காலத்தில் உணவுப் பொருட்களை முறைப்படுத்தி விநியோகம் செய்யும் அதிகாரியாக யோசேப்பு நியமிக்கப்பட்டு, அரசாங்கத்தின் முக்கியமான ஒரு மனிதரானார். இந்நிலையில் தோன்றிய அந்தப் பஞ்சம் இஸ்ரவேல் தேசத்தையும் விட்டு வைக்கவில்லை. ""பஞ்சக் காலத்தில் சுற்றுப் புறத்திலிருக்கும் எல்லா தேசங்களிலும் உணவுப் பற்றாக் குறை இருக்க, எகிப்தில் மாத்திரம் தானியங்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படுகின்றன'' என்பதைக் கேள்விப்பட்டு, யோசேப்பின் சகோதரர்கள் எகிப்திற்கு வர, அங்கே தங்கள் சகோதரனான யோசேப்புதான் மன்னருக்கு அடுத்த ஸ்தானத்தில், உயர்ந்த பதவியில் இருக்கிறார் என்பதை அறிந்து, தாங்களும் எகிப்திலே தங்கி விட உத்தேசித்து, எகிப்துக்குப் புறப்படுகிறார்கள். தங்கள் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக் கொண்டு, தங்கள் உடமைகள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு எகிப்தில் குடியேறினார்கள். இதுதான் இஸ்ரவேலர்கள் தங்கள் சொந்த தேசத்தை விட்டு வெளியேறிய முதல் சம்பவம்.
வெளிப் பார்வைக்கு இது எதேச்சையாக நடந்த ஒரு சம்பவத்தைப் போலக் காணப்பட்டாலும், உண்மையில் இது ஏற்கனவே ஆபிரகாமுக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்ட ஒரு தேவத் திட்டம்தான்! ஆதியாகமம் 15ம் அதிகாரத்தில் நீங்கள் இதைக் குறித்து வாசிக்கலாம். கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: ""உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அந்த தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும் நீ நிச்சயமாய் அறியக்கடவாய்.'' இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.'' (ஆதி. 15:13,14) என்றார். இந்த வேத வசனங்கள் மூலம் தேவன் வெளிப்படுத்தியிருக்கும் காரியங்களைப் பார்க்கும்போது, இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்துக்குப் போனதும், பின்னர் மோசேயின் மூலம் மீட்கப்பட்டு, திரும்ப வந்ததும், தற்செயலான செயல் அல்ல என்பது நன்கு புலப்படும். கர்த்தர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்திய மாதிரியே, இஸ்ரவேலர்கள் எகிப்துக்குப் போய் தங்கி விடுகிறார்கள். யோசேப்பு இருந்த காலம்வரை அவர்களுக்கு அங்கே ராஜ மரியாதை இருந்தது. ஆனால், காலம் செல்லச் செல்ல, யோசேப்பின் மறைவிற்குப் பிறகு, யோசேப்பை அறியாத மன்னர்கள் எகிப்தில் எழும்ப, இஸ்ரவேலர்கள் அந்த தேசத்தில் அடிமைகளாக நடத்தப்பட்டனர். கர்த்தர் சொன்னபடியே நானூறு வருடங்கள் வரை அவர்கள் அங்கே கடுமையாக உழைத்து, கடினமாக நடத்தப்பட்டு, அடிமைகளாக ஜீவித்தார்கள்.
அதன் பின்பு அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூக்குரலிட, கர்த்தர் அவர்களை மீட்கும்படி மோசேயை எழுப்பினார். மோசேயின் வழி நடத்துதலாலும், அவருடைய உதவியாளரான யோசுவாவைக் கொண்டும் கர்த்தர் இஸ்ரவேலர்களை வழி நடத்தி, மீண்டும் அவர்களுடைய சொந்த தேசத்திற்கே கொண்டு வருகிறார். இது கானான் தேசத்திற்கு இஸ்ரவேலர்களின் முதலாம் வருகை! கானானில் மீண்டும் இஸ்ரவேலர்கள் குடியேறிய பின்பு, அவர்களை நியாயாதிபதிகள் ஆண்டார்கள். பின்னர் அவர்கள் கர்த்தரிடம் வேண்டிக் கொள்ள, இஸ்ரவேலில் கர்த்தர் மன்னர் ஆட்சி முறையை ஏற்படுத்த, பிற்பாடு மன்னர்களின் ஆட்சி மலர்ந்தது.
----------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------
-இக்கட்டுரையை எழுதியவர் ”இயேசுவின் தொனி” ஆசிரியர் சகோ. வின்சென்ட் செல்வக்குமார், ராமநாதபுரம். இக்கட்டுரை ஒரு தொடராக வெளியாகிறதினால் அவ்வப்போது புதிப்பிக்கப்படும்.
"Before the end" article in tamil by Yesuvin thoni editor Bro.Vincent Selvakumar, Ramanathapuram. This is an ongoing article.Please visit this page frequently to get the latest updates.