Tuesday, August 23, 2011

அசைக்கப்படும் தேசங்கள்

ஆகாய்:2:6-ல் தேவன் சொல்லும் போது “இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.” என்கிறார். ”சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்” என செல்கிறது அந்த அத்தியாயம். சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் (இயேசு கிறிஸ்து) வருமுன் எல்லாமே அசைக்கப்படும் என்பது இங்கே நமக்கு உறுதியாகின்றது. அதற்கேற்ப இன்றைக்கு செய்திதாள்களை பார்த்தால் பல தேசங்களும் அசைக்கப்படுவது நமக்கு தெரியவரும்.அசைக்கவே முடியாதது என நினைத்திருந்த பல பெரிய நாடுகளின் பொருளாதாரங்களில் மிகப்பெரிய அதிர்வுகள்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடன்களில் தத்தளிக்கின்றன.யாருக்குமே என்ன செய்வது என்று தெரியவில்லை.யாராவது இதற்கொரு தீர்வு கொண்டுவரமாட்டார்களா என எல்லா தலைவர்களுமே ஏங்குகின்றனர். தங்கத்தின் விலை விண்ணை தாண்டி சென்று கொண்டிருப்பது நம் எல்லாருக்குமே தெரியும். அப்படியே ஆவிக்குரியவர்கள் மத்தியிலும் வெளியே சொல்ல முடியாதபடி கீறல்விழும் அளவுக்கு பெரிய அதிர்வுகள். எல்லாமே வெளிவேஷம்,மாய்மாலம்.

கூடவே பல தேசங்களும் பூமி அதிர்வுக்குள்ளாகின்றன.தமிழகம் ஒருகாலமும் பார்த்திராத நிலநடுக்கங்கள் இப்போது சகஜமாகியிருக்கின்றது.இன்றைக்கு அபூர்வமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தலைநகரம் வாசிங்டன் முதல் நியூயார்க் நகரம் வரை இந்த அதிர்வை உணர்ந்திருக்கின்றன.


வாழ்நாட்களில் ஒரு நாள்கூட பூமிஅதிர்ச்சியை பார்த்திராத வயதான பெரியவர்களெல்லாம் இப்போது பூமிஅதிர்ச்சியை பார்க்கிறார்கள் உணர்கிறார்கள்.கேட்டால் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை ஒன்றும் கூடவில்லை.நிலநடுக்கத்தை பதிவுசெய்யும் தொழில்நுட்பங்கள் தான் அதிகரித்திருக்கின்றன.இதனால் தான் நமக்கு பூமிஅதிர்ச்சிகளின் எண்ணிக்கை கூடியிருப்பது போல தோன்றுகிறதுவென சப்பை கட்டு கட்டுவார்கள். வாழ்க அவர்களும் அவர்கள் விஞ்ஞானமும்.இன்னும் எவ்வளவு காலம் தான் கண்ணைமூடி வைத்துக்கொண்டே இருட்டாய் இருக்கிறதுவென சொல்லி சம்மாளிப்பார்களோ தெரியவில்லை. இந்த அசைவுகளும் அதிர்வுகளும் தூங்கிக்கொண்டிருக்கும் மற்றும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் நம்மில் பல பேர்களை எழுப்பத்தான் என்பதை நம்மில் யார் அறிவார். காலத்தை அறிந்தவர்களாய் நாம் நித்திரையைவிட்டு எழும்ப கர்த்தர் தாமே நமக்கு உதவி செய்வாராக.
ரோமர் 13:11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

2 comments: