Friday, September 21, 2012

காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்

இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.

வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.

கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.

அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது,  அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப்  பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)

Thursday, September 13, 2012

கிறிஸ்து பற்றி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை (1888-1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”, ”தமிழன் என்றோர் இனமுன்று தனியே அதற்கோர் குணமுண்டு' 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' போன்ற இவரது மேற்கோள்கள் பிரபலமானவை.

இவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடிய பாடல்

தூயஞான தேவன்தந்தை பரமன்விட்ட தூதனாய்த்
துன்பம்மிக்க உலகினுக்கே அன்புமார்க்க போதனாய்
மாயமாக வந்துதித்து மறிகள்சேரும் பட்டியில்
மானிடக் குழந்தையாக மேரிகண்ணில் பட்டவன்
ஆயனாக மனிதர்தம்மை அறிவுகாட்டி மேய்த்தவன்
அன்புஎன்ற அமிர்தநீரின் அருவிகாண வாய்த்தவன்
மாயமாக மாந்தர்வாழ நெறிகொடுத்த ஐயனாம்
நித்தமந்த ஏசுநாதன் பக்திசெய்தே உய்குவோம்.

நல்லஆயன்; மந்தைபோக நல்லபாதை காட்டினான்;
நரிசிறுத்தை புலிகளான கோபதாபம் ஓட்டினான்;
கல்லடர்ந்து முள்நிறைந்து கால்நடக்க நொந்திடும்
காடுமேடு யாவும்விட்டுக் கண்கவர்ச்சி தந்திடும்
புல்லடர்ந்து பசுமைமிக்க பூமிகாட்டி மேய்த்தவன்
புத்திசொல்லி மெத்தமெத்தப் பொறுமையோடு காத்தவன்
கொல்லவந்த வேங்கைசிங்கம்கூசநின்ற சாந்தனாம்
குணமலைக்குச் சிகரமான ஏசுதேவ வேந்தனே.

ஏசுநாதன் என்றபேரை எங்கிருந்தே எண்ணினும்
ஏழைமக்கள் தோழனாக அங்குநம்மை நண்ணுமே.
தேசுமிக்க த்யாகமேனி தெய்வதீப ஜோதியாய்த்
தீமையான இருளைநீக்கி வாய்மைஅன்பு நீதியாய்ப்
பாகமாகப் பரிவுகூறிப் பக்கம்வந்து நிற்குமே
பகைவருக்கும் அருள்சுரக்கும் பரமஞானம் ஒக்குமே.
ஈசனோடு வாழவைக்கும் ஏசுபோத இச்சையை
இடைவிடாத யாவருக்கும் எதிலும்வெற்றி நிச்சயம்!

யோவான் 10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.

Reference:
Namakkal kavinjar V. Ramalingam Pillai about Jesus Christ
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0079.html

Tuesday, September 11, 2012

பாவமூட்டையுடன் செல்வேன் என்றார் பேரரசர் அவுரங்கசீப். அப்போ நீங்கள்?

பிரபல தாஜ்மகாலை கட்டிய ஷாஜகான் மன்னரின் வாரிசாக வந்தவர் பேரரசர் அவுரங்கசீப். ஆறாவது முகலாய மன்னராக அரியணைக்கு வந்த இவர் தனது அரசை மேலும் விரிவுபடுத்தி அக்கால பூமியின் மக்கள் தொகையில் நாலின் ஒருபங்கை அரசாண்டு வந்தார்.

ஆனால் பேரரசர் அவுரங்கசீப்பின் இறுதி காலங்களோ பெரும்பாலும் தனிமையிலேயே கழிந்தது. ”நான் என் பேரரசை பாதுகாக்க தவறிவிட்டேன். விலை மதிப்பற்ற என் வாழ்வை நான் வீணாக்கிவிட்டேன்” என சொல்லி தன் மூத்த மகன் அசாமிடம் அவர் புலம்பியிருக்கிறார்.
மரணம் அவரை நெருங்கும் வேளையில் அவுரங்கசீப் இவ்வாறாக தன் இளைய மகன் கம் பாக்ஷ்க்கு கடிதம் எழுதினார்:
"நான் இழைத்த ஒவ்வொரு கொடுமையின், நான் செய்த ஒவ்வொரு பாவத்தின், தவறின் பலனை நான் சுமந்து செல்கிறேன். என்ன விசித்திரம் நான் பிறந்த போது உலகில் சுதந்திரமாக பிறந்தேன். இறக்கும் போதோ பாவமூட்டையுடன் செல்வேன். நான் பார்க்கும் இடமெல்லாம் அல்லா மட்டுமே தெரிகிறார். நான் ஒரு மிக மோசமான பாவி. எனக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ தெரியவில்லை.” 
என எந்த ஒரு நம்பிக்கையும் இன்றி எழுதியிருந்தார். 1707-ல் கிட்டத்தட்ட அவரது தொண்ணூறு வயதில் அவுரங்கசீப் காலமானார்.

ஆனால் கிறிஸ்துவை பின்பற்றுகிற நமக்கோ ஒரு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கின்றது மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார் (சங்கீதம் 103:12) என சொல்லுகிறது வேதம். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் (மத்தேயு 11:28) என்று சொல்லி இயேசு பாவிகளை அழைக்கிறார். பாவங்களை இயேசு கிறிஸ்து மன்னிக்கிறார். நீங்கள் அவரிடம் வேண்டும் போது உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்ல அவருக்கு அதிகாரம் உண்டு. நாம் சுமக்க வேண்டிய தேவையில்லை.  எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள் (ரோமர் 4:7 ), என்ன அருமையான வேத வசனம் இது.

Reference:
http://www.srichinmoylibrary.com/books/1368/9/8/index.html

Monday, September 10, 2012

கிறிஸ்துவுக்கு ஒரு இரத்த சாட்சி

கிறிஸ்து முன்னுரைத்த வாக்கியங்கள் அப்படியே நூற்றுக்கு நூறு நிறை வேறிவருவதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டு வருகிறோம். நம் இயேசு சொல்லி சென்றிருக்கிறார் ”அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” என்று (மத்தேயு 24:9).

கிறிஸ்தவர்கள் அதிக சதவீதம் உள்ள, பெரும்பாலான சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கிறிஸ்தவர்களாக கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்திலேயே ஒரு 29 வயது இளைஞர் கிறிஸ்தவர் என்ற ஒரே காரணத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார். 15 பேர் மட்டுமே கூடிய ஒரு வீட்டு ஜெபக்கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு கும்பல் அங்கு நின்றிருந்த வாகனங்களையும், சொத்துக்களையும் சேதப்படுத்திவிட்டு இந்த இளைஞரையும் அடித்து கொன்று போட்டு விட்டு சென்றுவிட்டது. அதை தொடர்ந்து குற்றவாளிகளை அரசு பிடிப்பதை விட்டு விட்டு, அமைதியாக இரங்கல் பேரணி சென்ற 13,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. என்ன கொடுமை.கர்த்தர் தாமே இரத்தசாட்சியாக மரித்துப்போன சகோதரன் எட்வின் ராஜ் குடும்பத்துக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பாராக.

 I தெசலோனிக்கேயர் 4:16,17,18 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள்.பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

Thursday, September 06, 2012

எழுத்தறிவித்தவன் இறைவன்


Saturday, September 01, 2012

2000 ஆண்டுகால திருச்சபை வரலாறு


வீடியோ செய்தி


மேலும் விவரங்கள்
பல பெயர்களில் சபைகள் எப்படி தோன்றின?
கத்தோலிக்க சபை ஆரம்பமானது எப்படி?
ஆங்கிலிக்கன் (எபிஸ்கோபல்) சபையின் ஆரம்பம்
மெத்தடிஸ்ட் சபை- முரண்பாடுகள்
 பாப்டிஸ்ட்களின் வரலாறு

மத்தேயு 16:18 இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை.