கிறிஸ்தவர்களுக்கு ஜெயலலிதா 3 வாக்குறுதி
விழாவில் வாழ்த்திப் பேசிய சுரேஷ் சாமியார் காணி, 3 கோரிக்கைகளை விடுத்து, அது தொடர்பான மனுவையும் ஜெயலலிதாவிடம் அளித்தார்.
விழாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கியதுடன், ஏழைகளுக்கு நல உதவிகளையும் வழங்கி ஜெயலலிதா பேசும்போது அக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அவர் பேசியதாவது:
இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகைகளை வழங்குவதுபோல, கிறிஸ்தவர்கள் இஸ்ரேலுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும்போது அரசு சலுகை வழங்க வேண்டும் என விழா மேடையில் கோரிக்கை வைக்கப்பட்டது. தேர்தலில் வென்று கோட்டையில் மீண்டும் முதல்வராக அமர்ந்தால் இக் கோரிக்கை உடனே நிறைவேற்றப்படும்.
அவரவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் எதை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளலாம். அப்படியிருக்கையில் தேவாலயங்கள் கட்ட தடைவிதிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அவ்வாறு யார் தடை செய்வது, அவர்களுக்கு அவ்வாறு சொல்ல யார் அதிகாரம் அளித்தது? கர்த்தர் கருணையால் கழக ஆட்சி அமைந்தால் இக் கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு கமிஷன் உள்ளது. அக் கமிஷனிடம் கோரிக்கையை முறையிட்டு, நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
Thanks dinamani.com