கிறித்துவ மிஷனரிகள் உண்மையில் உதவுகிறார்களா அல்லது ஊறு விளைவிக்கிறார்களா?
''நான் செய்வதை கிறுக்குத்தனம் என நீங்கள் எண்ணலாம். ஆனால் இந்த மக்களிடம் இயேசு குறித்து அறிவிப்பது மதிப்புமிக்க ஓர் செயல் என நான் எண்ணுகிறேன்'' - கடந்தவாரம் சென்டினலீஸ் மக்களால் கொல்லப்பட்ட ஜான் ஆலன் சாவ் தனது பெற்றோருக்கு எழுதிய இறுதி கடிதத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்.
அவர் ஒரு மிஷனரி அல்ல என்றாலும் பழங்குடிகளிடம் இயேசுவின் போதனைகளான நற்செய்தியை கொண்டுச் சேர்ப்பது தனது குறிக்கோள் என சொல்லியிருக்கிறார்.
அதற்காக அவர் மேற்கொண்ட பணி மற்றும் உயிரிழந்த விவகாரம் தங்களது நம்பிக்கைகளை பரப்பும் பணியில் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானவர்களின் மீது கவனம் குவிவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
ஆனால் மிஷனரிஸ் என அழைக்கப்படும் இந்த கிறித்துவ மறை பரப்புவோர் யார்? அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? அவர்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறதா அல்லது அவர்களது இருப்பு விரும்பத்தகாத ஒன்றாக உள்ளதா?
மிஷனரிகள் என்பது என்ன?
பல்வேறு மதங்களும் உலகம் முழுவதும் தங்கள் மார்க்கத்தை பரப்புவோரை அனுப்புகின்றன. ஆனால் கிறித்தவ மிஷனரிகள் அளவுக்கு உலகம் முழுவதும் நன்கு அறியப்படும் மறை பரப்புவோர் வேறு மதத்துக்கு இல்லை.
அனைத்து கிறித்தவ மிஷனரிகளும் பைபிளில் உள்ள ஒரு பத்தியை மேற்கோள் காட்டுகின்றனர். மத்தேயுவின் நற்செய்தியில் இருக்கும் ஒரு பத்தியில் இயேசு தன்னை பின்தொடர்பவர்களை அனைத்து நாடுகளிலும் சென்று நற்செய்தியை போதிக்கச் சொல்கிறார்.
பரலோகத்திற்குச் செல்வதற்கு முன் சீடர்கள், இயேசுவின் கடைசி அறிவுறுத்தல்களில் சிலவற்றை செய்துமுடிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தியை மிஷனரிகள் நன்கு அறிவர்.
காலனியாதிக்க முயற்சிகளை முன்னெடுப்போரில் மதத்தில் அதீத பற்றுள்ளவர்களும் உள்ளனர். மதத்தை பரப்புவது என்பது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு வெளியே இருக்கும் மக்களை 'நாகரிக்கப்படுத்துவதற்கான' வழியாக சொல்லப்படுகிறது.
பின்னாளில், மதத்தை பரப்பும் நடவடிக்கைகள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண்பதற்கான ஒரு விஷயமாக கூறப்பட்டது.
''ஜான் சாவ் விவகாரத்தைப் பொறுத்தவரையில் அவர் மிஷனரிகளின் பிரதிநிதி கிடையாது'' என பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் டேவிட் ஹாலிங்கர் தெரிவிக்கிறார்.
''சுவிசேஷகர்கள் இன்னமும் மத மாற்ற வேளைகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால் மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டுவது போன்ற செயல்களையும் தற்போது செய்துகொண்டிருக்கிறார்கள். பலரிடமும் வலுவான சேவை திட்டங்கள் இருக்கின்றன'' என்று அவர் கூறுகிறார்.
உலக கிறித்துவம் குறித்த ஆய்வுக்கான அமெரிக்க மையத்தின் தகவலின்படி உலகம் முழுவதும் 4,40,000 கிறித்துவ மிஷனரிகள் இருக்கின்றனர்.
கத்தோலிக்கர்கள், ப்ரோட்டஸ்டன்ட்ஸ், பழமைவாத கிறித்தவர்கள் மற்றும் யெஹோவா சாட்சிகள் மற்றும் மோர்மோன்ஸ் என அறியப்படும் பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்து ஆலயத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரை உள்ளடக்கிய எண்ணிக்கையே இது.
கடந்த 2017-ல் தனது மிஷனரிகள் 2,33,729 பேரை புதிதாக மதம் மாற்றியதாக இவ்வாலயம் தெரிவிக்கிறது.
மிஷனரிகள் என்ன செய்கிறார்கள்?
பப்புவா நியூ கினியாவில் கடந்த சில ஆண்டுகளாக கிறித்துவ மறை பரப்புவோராக ஜான் ஆலன் மற்றும் அவரது மனைவியும் செவிலியருமான லேனா பணிபுரிந்து வந்தனர்.
''கிறிஸ்துவத்தின் மதிப்புகள் மற்றும் சுவிசேஷ மாதிரிகளை நாங்கள் வளர்க்க முயல்கிறோம்'' என இந்த அமெரிக்க ஜோடி பிபிசிக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்தது.
இந்த ஜோடி, தாங்கள் வாழ்ந்த வளைகுடா மாகாணத்தின் கமியா மக்களுக்கு உதவுவதற்காக பத்து வருடங்களுக்கு முன்னதாக ஒரு மருத்துவமனையை அமைத்தது. குனாய் ஆரோக்கிய மையத்தில் பப்புவா நியூ கினியாவைச் சேர்ந்த ஐவரும், மூன்று அமெரிக்க செவிலியர்களும் இவர்களுடன் வேலை செய்து வருகின்றனர்.
இந்த இணையானது தங்கள் பணியை செய்வதற்காக கமியா மொழியை நன்றாக கற்றுக்கொண்டுள்ளது.
''எங்களுக்கு இம்மொழியை கற்பதில் சிரமம் இருந்தது. ஏனெனில் நாங்கள்தான் இம்மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்து ஆவணப்படுத்தினோம். பின்னாளில் எங்களை விட வெளியில் இருந்து வரும் எவரும் சரளமாக பேச முடியாத அளவுக்கு நிலை மாறியது'' என விவிரிக்கிறார் ஆலன்.
வரலாற்று ரீதியில் சில மிஷனரிகள் புதிய மொழியை எளிதில் கற்றுக்கொள்வதாக கேம்பிரிட்ஜ் பல்கலைகழக அமெரிக்க வரலாற்றுக்கான பேராசிரியர் ஆன்ட்ரூ பிரெஸ்டன் தெரிவிக்கிறார்.
''முன்பை விட தற்போது கற்றுக்கொள்ளும் திறன் சற்றே குறைந்திருப்பதாகவும் ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதம் பரப்புவோர் ஆப்ரிக்க மற்றும் சீன, ஜப்பானிய மொழிகள் உள்பட ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்கள்'' என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
நிகரகுவாவில் ஸ்காட் மற்றும் ஜெனிஃபர் எஸ்போஸிடோ ஒரு பண்ணையையும் ஒரு விளையாட்டு திட்டத்தையும் நடத்தியுள்ளனர். மேலும் தங்களது நம்பிக்கையை பரப்புவதற்காக பைபிள் கற்கும் குழுக்களையும் நடத்தியுள்ளனர்.
''நாங்கள் தொடர்ந்து நற்செய்தியை பகிர்ந்து வருகிறோம்'' என ஸ்காட் பிபிசியிடம் தொலைபேசி மூலமாக தெரிவித்தார். இந்த இணையானது வேண்டுமென்றே எத்தனை பேரை அவர்கள் மதமாற்றம் செய்தார்கள் என்பதை கணக்கு வைக்கவில்லை. கடந்த ஆறு வருடங்களில் சுமார் 800 முதல் 1200 பேரை இவர்கள் மதமாற்றம் செய்திருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
"ஒவ்வொரு ஆன்மாவும் முக்கியமானது," என்கிறார் ஸ்காட். "நீங்கள் உதாரணமாக 500 பேரை இலக்காக வைத்துக்கொள்கிறீர்கள் எனில் நீங்கள் இலக்கின் பின் ஓடுபவராகிவிடுவீர்கள். ஒரு நபரை நீங்கள் மதமாற்றம் செய்ய வேண்டிய அவசியமிருக்கலாம். ஆனால் அதற்கு நீண்ட காலம் தேவைப்படலாம். ஆனால் நீங்கள் எண்ணிக்கைக்காக அவரை புறக்கணிக்கமுடியாதல்லவா'' என்கிறார் ஸ்காட்.
ஜான் சாவ் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
ஜான் சாவ் விவகாரம் குறித்து இங்கே தெரிந்தபோது, தங்களுக்கும் அது போன்று செய்ய எண்ணமிருந்ததை பிபிசியிடம் மின்னஞ்சல் வாயிலாக ஜான் ஆலன் தெரிவித்தார்.
அவர் தனிப்பட்ட முறையில் தீவுகளுக்கு செல்வது பற்றி நினைக்கவில்லை என்றாலும், அவர் சென்டினலீஸ் மக்களை அணுகுவதைப் பற்றி பேசியவர்களின் சக ஊழியர்களைப் பற்றி பிபிசியிடம் பகிர்கிறார்.
'' அவர்கள் சென்டினல் தீவுக்கு செல்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்காதபோதிலும் எப்படி மக்களை பாதுகாப்பாக அணுகுவது? அவர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்பை எப்படித் துவங்குவது, எப்படி அவர்களின் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொள்வது என்பது குறித்தெல்லாம் தங்களது கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தனர்'' என அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்போஸிடோ இணையர் இருவருமே ஜான் சாவ்வுக்கு நடந்தது சோகமான ஒன்று என நம்புகிறார்கள்.
சிலர் ஜான் சாவ் செய்த விஷயத்தை முட்டாள்தனமாக எண்ணுவார்கள் என்பதையும் மேலும் சிலர் அம்மக்களை ஆதரிப்பார்கள் என்பதையும் அவ்விருவரும் அறிந்துள்ளனர்.
''ஜான் சாவ் மீது மற்றவர்கள் எண்ணுவது போல ஒரு வழியில் மட்டும் கல் எறிய நான் தயங்குவேன்'' என்கிறார் ஜெனிஃபர் எஸ்போஸிடோ.
'' நான் படித்து தெரிந்துகொண்டதுவரை ஜான் சாவ் கடவுளை மிகவும் நேசித்துள்ளார் என அறிகிறேன். அவரது தியாகம் எதிர்காலத்தில் பலரை கிறித்தவத்துக்கு நகர்த்தும்.''
''ஜான் விதைத்த விதையில் இருந்து என்னென்ன பெரிய காரியங்கள் நடக்கவுள்ளன என யாருக்கு தெரியும் ? '' என்கிறார் ஜெனிஃபர்.
ஒருவேளை ஒரு மருத்துவ குழு இந்த விதிகளை உடைத்து அங்கே சென்றாலோ அல்லது சுங்க அதிகாரிகள் பழங்குடியினர் நோய்வாய்பட்டிருந்தால் அதில் இருந்து அவர்களை காப்பதற்காக அந்த தீவுக்குச் சென்றிருந்தால் இப்போது ஜானை விமர்சிப்பவர்களிடமிருந்து வந்த எதிர்வினை வேறுமாதிரியாக வந்திருக்கக்கூடும் என திருமதி எஸ்போஸிடோ நம்புகிறார்.
'' ஒருவேளை அங்கே மருத்துவர்கள் சென்று அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு மக்களும் அவர்களை வீரர்கள் என அழைத்திருப்பார்கள்'' எனச் சொல்லும் ஸ்காட், ''ஜான் சாவ் அப்பழங்குடியினரின் நித்திய வாழ்வை காப்பாற்றவே அங்கு சென்றார்'' என்கிறார்.
ஜான் சாவ் விதிகளை மீறி அங்கே சென்றதை மன்னிக்கவில்லை எனக் கூறும் ஸ்காட் எஸ்போஸிடோ, தாங்கள் எப்போதும் அந்தந்த நாட்டின் சட்டங்கள், சுங்க விதிகள் போன்றவற்றை மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.
'ஜான் தாம் இறப்பதற்கு தயாராகியே விரும்பி அங்குச் சென்றுள்ளார். அவரது இதயத்தை நாம் நகலெடுக்கவேண்டும். ஆனால் அபாயகரமான அந்த பழங்குடிகளை அனைவரும் அவசியம் தேட வேண்டும் என தாம் எண்ணவில்லை என்கிறார் ஸ்காட்.
மிஷனரி வேலை ஏகாதிபத்தியத்தின் ஓர் வடிவமா?
ஜான் சாவ் இறந்தபின் முன்னாள் மிஷனரி கெய்ட்லின் லோவெரி பேஸ்புக்கில் ஓர் பதிவு எழுதியுள்ளார்.
'' நான் மிஷனரியாக இருந்தேன்'' எனத் துவங்கும் அப்பதிவில் '' நான் கடவுளின் பணியைச் செய்வதாக நினைத்துக்கொண்டிருந்தேன் ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு நன்றாக இருந்த ஒரு வேலையை செய்தேன் அவ்வளவே.'' என்கிறார்.
'' இதற்குப் பெயர்தான் வெள்ளை மேலாதிக்கம். இது தான் காலனித்துவம் '' என அவர் இப்பதிவில் எழுதியுள்ளார்.
மார்க் ப்ளாட்கின் ஒரு தாவரவியல் வல்லுநர் மேலும் அமேசான் காடுகள் பாதுகாப்பு குழுவின் நிறுவனரும் தலைவரும் கூட.
'' தங்களது நலனுக்காக காட்டுக்குள் இருக்கும் வெளியுலகின் தொடர்புகளற்ற மனிதர்களை வெளியே இழுத்து வருகின்றனர். சில நேரங்களில் இது பழங்குடிகளின் நலனுக்கு எதிரான செயலாக இருக்கிறது'' என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மிஷனரிகள் வருகையும் - 2 ஆண்டுகளில் 40-50 சதவீத பழங்குடியினர் அழிவும்
தென் அமெரிக்காவில் உள்ள சுரினாமில் உள்ள அகுரியோ மக்களிடம் மார்க் பேசியுள்ளார். 1969-ல் மிஷனரிகள் இவர்களை அணுகியுள்ளனர். இரண்டே ஆண்டுகளில் 40-50 சதவீதம் அகுரியோக்கள் சுவாச பிரச்னைகள் காரணமாக இறந்துள்ளனர். ஆனால் மன அழுத்தம் அல்லது கலாசார அதிர்ச்சி உள்ளிட்டவை காரணமாக அவர்கள் இறந்திருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக மார்க் ப்ளாட்கின் கூறுகிறார்.
''அவர்கள் முதன்முதலாக ஆடையணிந்த மக்களை பார்த்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ஊசிகள் போடப்பட்டுள்ளன'' என்கிறார் மார்க்.
மறைபரப்பும் வேலை குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு பார்வைகள் உள்ளன. மதமாற்றம் செய்வது என்பது நேபாளத்தில் சட்ட விரோதமானது.
அயல்நாட்டில் இருந்து மதமாற்றம் செய்த குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டவர்கள், அதிகபட்ச தண்டனையான ஐந்து வருட சிறை தண்டனைக்கு பிறகு நாடு கடத்தப்படுவார்கள் என நேபாளத்தின் சட்டம் கூறுகிறது.
''சில மிஷனரிகள் அப்படிச் செயல்படலாம் ஆனால் அனைவரும் அப்படி கிடையாது'' என்கிறார் பேராசிரியர் பிரெஸ்டன்.
'' அமெரிக்க புரொட்டஸ்டன்ட் மிஷனரிகள் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிராக செயல்படத்துவங்கினர் . தாங்கள் அமெரிக்கவின் வலிமையான சக்தியின் ஒர் அங்கம் என்பதை உணர்ந்திருந்தனர். இதனால் எளிதில் அதிலிருந்து தப்பிக்கமுடியவில்லை. இதன் காரணமாக சில மிஷனரிகள் அயல்நாடுகளில் உள்ளூர் அடையாளங்களை ஊக்குவித்து அமெரிக்காவின் லட்சியங்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
இன்னமும் பல்வேறு அமெரிக்கர்கள் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்கா தனித்துவமிக்கது என நம்புகின்றனர். ஆனால் அமெரிக்காவில் உள்ள பல மிஷனரிகள் கிறித்துவத்தின் மூலம் உலகத்தை மேம்படுத்த விரும்புகிறார்களே அன்றி அமெரிக்கா எனும் அடிப்படையில் அல்ல'' என்கிறார் பேராசிரியர் பிரெஸ்டன்.
மிஷனரிகள் அல்லது பெரு வணிகர்களிடையே காலனியாதிக்க செயல்பாடு எந்தவிதத்திலாவது வெளிப்பட்டால் அதனால் தாம் வெறுப்படைந்துள்ளதாக ஆலன் தெரிவிக்கிறார்.
''நான் எப்போதும் கமியாவிலேயே இருப்பேன் என நினைக்க நானொன்றும் அப்பாவியல்லன். ஆனால், எங்களது அணி எந்தவொரு காலனித்துவ சாய்வை அகற்றுவதற்கும் அதற்கு பதிலாக அவர்களுடன் இணைந்து நட்புறவை உருவாக்கவும் போராடும்'' என்கிறார் ஆலன்.