Tuesday, September 01, 2009

மீண்டும் சனகெரிப் சங்கம்?


சனகெரிப் சங்கம் அல்லது ஆங்கிலத்தில் Sanhedrin என அறியப்படும் யூத அறிஞர்களின் சங்கம் வேதாகமத்தில் பல இடங்களில் ”ஆலோசனைசங்கம்” என அறியப்படுகிறது. இயேசு கிறிஸ்துவை கெத்சமெனே தோட்டத்தில் பிடித்த யூதர்கள் அவரை இந்த ஆலோசனை சங்கத்துக்குத்தான் முதலில் கூட்டிச்சென்றார்கள்.(மத்:26:59) ஏனெனில் இந்த சங்கம் தான் வரப்போகிற மேசியாவை அது மேசியாவா இல்லையா என யூதர்களுக்கு அடையாளம் காட்டும். இந்த சங்கத்தில் பொதுவாக மெத்தப் படித்த அறிஞர்களும் ஆசாரியர்களும் மூப்பர்களும் வேதபாரகர்களும் அங்கத்தினர்களாக ஒரு அரைவட்ட வடிவ அவையில் அமர்ந்திருப்பார்கள். ஆச்சரியமான விசயமென்னவென்றால் அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தை தோற்றுவித்த அதன் முற்பிதாக்களும் இதே பாணியில் தான் அரைவட்ட வடிவ சபையாக அதன் அமெரிக்க செனட்டையும் அமைத்தார்கள். அரசியலில் அமெரிக்க செனட் போன்ற அதிகாரமும் கூடுதலாக இந்த சங்கம் நீதிமன்ற நடவடிக்கைகளையும் கூட மேற்கொள்ளும்.

இயேசுகிறிஸ்துவின் காலத்திலிருந்த சனகெரிப் சங்கம் இயேசுவை மேசியாவாக அங்கீகரிக்காமல் அவரை தேவ தூஷணம் சொல்கிறார் எனச் சொல்லி கொலை செய்ய உத்தரவிட்டது. அதே சனகெரிப் சங்கம் தான் இனி வரவிருக்கும் இயேசுவையும் மேசியாவென அங்கிகரிக்க வேண்டும்.தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து... புலம்புவார்கள் என்ற சகரியா:12:10-14 வசனங்கள் இப்படியாக நிறைவேறும். ஆனால் அதற்கும் முன்பாக அவர்களோ வரவிருக்கும் அந்திக்கிறிஸ்துவை மேசியாவென நம்பி அவனை உயர்த்திப்பிடிப்பார்கள். அதற்கு வெளிப்படுத்தின விசேசத்தில் வரும் கள்ளத்தீர்க்கதரிசி மிகவும் உதவுவான். ஆனால் அந்திக்கிறிஸ்துவோ பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை ஸ்தாபிக்க அவன் நிஜ முகம் யூதர்களுக்கு வெளிப்படும்.(தானியேல் 11:31) அந்திகிறிஸ்துவால் வஞ்சிக்கப்பட்டது தெரிந்ததும் இதே அவையினர் மனம் கொந்தளித்து கசந்து அழுது முன்பு மேசியாவாக வெளிப்பட்ட இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் கொலை செய்ய கட்டளை இட்டதற்காக மிகவும் அழுவார்கள் இந்த காரியமெல்லாம் நடைபெற இந்த சனகெரிப் சங்கம் மீண்டும் புத்துயிர் பெற்றாக வேண்டும். இயேசு கிறிஸ்துவுக்கு பின் 358-க்கு பிறகு ரோமர்களின் உபத்திரவங்களால் இந்த சங்கம் தொடர்ந்து இயங்க முடியாமல் போயிற்று. அது முற்றிலுமாக கலைக்கப்பட்டது. இப்போது இஸ்ரவேல் நாடு உதயமாகி அவர்களின் மூல பாஷையாகிய எபிரேய மொழியும் புத்துயிர் பெற்றதை தொடந்து யூத மத சம்பிரதாயங்களையும் புத்துயிராக்க முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது, அதன் ஒரு படியாக எருசலேம் தேவாலத்தின் பலிபீடம் கட்டும் பணி ஏற்கனவே தொடக்கப்பட்டுவிட்டதை இங்கு குறிப்பிட்டிருந்தோம். அது போல இந்த “ஆலோசனை சங்கத்தையும்” மீண்டும் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த சங்கம் தான் வரும் காலத்தில் யார் மேசியா என ஏற்றுக்கொள்ளவும் பொய் மேசியாவை சங்கரிக்கவும் இறுதி முடிவுகள் எடுக்கும் வல்லமை கொண்டதாய் இருக்கும். (தானி:9:24) இந்த சங்கத்தில் 71 யூத அறிஞர்கள் இருப்பார்கள்.(எண்:11:16) இவர்கள் பல்வேறு துறையிலும், நியாயப் பிரமாணத்திலும் சிறந்த ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த சங்கம் பற்றிய மேலும் தகவல்களை கீழ்கண்ட தளத்தில் தெரிந்து கொள்ளலாம். http://www.thesanhedrin.org
பாருங்கள் எல்லாமே நம்மை எங்கே கூட்டிச்செல்கிறதென்று!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment