(இயேசு) அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார், பூலோகத்தை நீதியோடும், ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார் சங்.98:9இயேசுகிறிஸ்து மனுக்குலத்தை மீட்கும்படியாக ஏழைக் கோலம் எடுத்து, மனிதனாக இந்த உலகத்திற்கு வந்தார். இனிமேல் இயேசு கிறிஸ்து இராஜாதி இராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் வரப்போகிறார். இயேசு கிறிஸ்துவின் வருகையைத்தான் உயிரோடு இருக்கும் நாம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தலைவர் ஒருவர் வருகிறார் என்றால் நாம் பலவிதமான ஆயத்தத்தோடும், தகுதியோடும் அவருடைய வருகைக்காய் காத்திருப்போம். தலைவரின் வருகையோ, ஒரு இமைப்பொழுதில் இருக்காது, அது நீண்ட நாட்களுக்கு முன் ஆலோசித்து முடிவு பண்ணினபின்புதான் ஒரு நாளையும் நேரத்தையும், தேதியையும் குறிப்பிட்டு சொல்லுவார்கள். ஆனால் நம்முடைய தேவனாகிய இராஜாதி இராஜா வரும் நாளையும், நாழிகையும், பிதா ஒருவர் தவிர வரப்போகிற மனுஷ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் அறியார்.
ஆகையால் நாம் இயேசு கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருக்கிற, நாம் எவ்வளவு ஜாக்கிரதையோடு, விழிப்போடு காத்திருக்க வேண்டும் என்பதை அறிவோம். இயேசு கிறிஸ்துவின் வருகையை விரும்புகிற துன்மார்க்கர்களுக்கு ஐயோ! கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு, கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும் (ஆமோ.5:18) அந்த நாள் துன்மார்க்கர்களுக்கு இருட்டாகவே காணப்படும்.
தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள், அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும், புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம் (II பேது.3:12,13) இயேசு கிறிஸ்துவின் வருகையை ஆவலோடு காத்திருக்கிற நாமும் கறையற்றவர்களும், பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருப்போமாக.
1.இயேசு கிறிஸ்துவின் முதல் வருகை
இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை பற்றி, இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னமே தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டது. இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசா.7:14) என்றும், எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக் குள்ளே, சிறியதாயிருந்தாலும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திருந்து புறப்பட்டு வருவார் (மீகா.5:2) ஒரு நட்சத்திரம் யாக்கோலிருந்து உதிக்கும். ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் (எண்.24:17) என்ற தீர்க்கதரிசிகளின் தீர்க்க தரிசனத்தின்படியே, இயேசு கிறிஸ்து யூதேயாவிலுள்ள பெத்லகேமில் குறித்த காலத்தில் ஒரு கன்னி மரியாளிடம், ஏழைக் கோலமாக இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தார்.
ஆனாலோ, அவர்தான் இயேசு கிறிஸ்து என்று உலகம் அறியாமல், அவரை சிலுவையில் அறையும்படியாகவும், அவருடைய இரத்தத்தை சிந்தும்படியாகவும் ஒப்புக்கொடுத்தனர். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்த அதே தீர்க்கதரிசிகள், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றியும் தீர்க்கதரிசனங்களாக உரைத்துள்ளனர். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எல்லாம் எப்படி நிறைவேறியதோ, அப்படியே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் என்பதற்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை திட்டவட்டமாக அறியலாம். எத்தனையோ மதகுருமார்களும், மகான்களும் இந்த உலகத்தில் தோன்றி, வாழும்படியாகவும், ஆளும்படியாகவும் தோன்றினார்கள். ஆனால் நம்முடைய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தை இரட்சிக்கும்படியாகவே இந்த பூமியில் வந்தார்.
இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
2.இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை
திருடனைப் போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய் வெளி.3:3இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையானது இரண்டு விதங்களில் நிறைவேறும். முதலாவதாக இயேசு கிறிஸ்து இரகசியமாக பூரணமாக்கப்பட்ட பரிசுத்தவான்களைஅழைத்து கொண்டு செல்ல வருவார். இன்னொன்று வெளியரங்கமாய் எல்லோருடைய கண்களும், காணும்படியாக வருவார்.
இரகசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டால், அது இரகசியம் என்று சொல்வதில்லை. இரகசியத்தை எல்லோரும் தெரியாமல் இருந்தால் அதுவே இரகசியம். இயேசு கிறிஸ்து வருவதும் உலகத்தின் ஜனங்களுக்கு தெரிவதில்லை. இன்றைக்கு உள்ள கிறிஸ்தவர்களுக்கும் கூட இயேசு கிறிஸ்துவின் வருகைக்குபின் என்ன சம்பவிக்கும் என்பது தெரியாது. ஏனென்றால், அந்தகார லோகாதிபதி அவர்களின் கண்களை குருடாக்கி போட்டுவிட்டான். எனவே வேதபுத்தகத்தை வாசித்தாலும், அவர்களால் அதை புரிந்து கொள்ள முடிவதில்லை.
கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத் தோடும், தேவ எக்காளத்தோடும், வானத்திலிருந்து இறங்கி வருவார், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக, மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகா யத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம் (I தெ.4:16,17) இரகசிய வருகை யில் இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சத்தம் பூரண மாக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்கு மட்டுமே கேட்கும், எனவே ஒரு இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவார்கள். உயிரோடு இருக்கும் பூரண பரிசுத்தவான்களும் கர்த்தருக்கு எதிர்கொண்டு அவரோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு தேவனோடு இருப்பார் கள். நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிசத்தில், ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். (1 கொரி.15:51)
தேவனோடு எடுத்துக்கொள்ளப்பட்டு மறுரூபமானவர்கள் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே, நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம் (1 யோ.3:2) இரத்த சாட்சியாய் மரித்த பரிசுத்தவான்கள், கர்த்தருக்கென்று கை, கால்களை இழந்தவர்கள் அனைவரும் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகையில் எடுத்துக் கொள்ளப்படும்போது இமைப்பொழுதில் மறுரூபமாகி தேவசாயலுக்கு ஒப்பாகக் காணப்படுவார்கள்.
கைவிடப்பட்டவர்கள், எடுத்துக்கொள்ளப்பட்டவர்களை காணாதபடியால் தேடி அலைவார்கள். செய்திதாள்களிலும், வானொலிகளிலும், TV-களிலும் காணவில்லை என்று விளம்பரம் கொடுப்பார்கள். அபாய சங்குகளின் ஒசைகளும், கோயில் மணி சத்தங்களும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இரகசிய வருகைக்கு பின்பு அந்திகிறிஸ்துவின் ஆட்சி பூமியில் ஆரம்பிக்கும், முதல் 3 1/2 வருடங்கள் உபத்திரவ காலமும், அடுத்த 3 1/2 வருட காலங்களும் மகா உபத்திரவ காலமும் காணப்படும். இந்த சூழ்நிலையில்தான் சத்தியத்தை அறிந்தும், சரியாகக் கைக்கொள்ளாதவர்கள், அந்தி கிறிஸ்துவின் ஆட்சியின்போது, போது பலியையும்,காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான். நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன் மேல் தீருமட்டும் சொரியும். (தானி.9:27) முதல் மூன்றரை வருட முடிவில் அந்தி கிறிஸ்து தன் சுயரூபத்தைக் காட்டுவான். இந்த சமயத்தில்தான் அந்தி கிறிஸ்து பாழாக்குகிற அருவருப்பை பரிசுத்த ஸ்தலத்தில் நடப்பிப்பான். (இயேசு கிறிஸ்துவும்) இப்படியாக கடைசி காலத்தில் இருக்கும் என்று சொன்னார். பாழாக்குகிற அருவருப்பைக் குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்தஸ்தலத்தில் நிற்க காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள் (மத்.24:15,16) இந்த சமயத்தில்தான் யூதர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு அவன் அந்திக்கிறிஸ்து என்று நினைத்து அவனுக்கு எதிர்த்து நிற்பார்கள். அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவது எதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கு மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல் உட்கார்ந்து தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான் என்று அப்போஸ்தலனாகிய பவுல் அந்தி கிறிஸ்துவைக் குறித்து சொல்லியதீர்க்கதரிசனம் (II தெ.2:4) நிறைவேறும்.
3.அர்மகெதோன் யுத்தம்
அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான் வெளி.17:16.அர்மகெதோன் என்பதற்கு மலைகளால் சூழப்பட்ட மெகிதோ பள்ளத்தாக்கு என்று பொருள். இந்த பள்ளத்தாக்கிலேதான் யோசியா, நேகோவோடே யுத்தம் பண்ண வேஷம் மாறி வந்தான். (II நாளா.35:22) இது ஆசியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் செல்லும் பிரதான பாதையில், மிகப்பெரிய மலைகள் சூழ்ந்த நிலப்பரப்பாயும் இருக்கிறது. இங்கு பெரிய யுத்தங்கள் நடைபெறுவதற்கு ஏற்றபடி உலகத்தின் பெரிய யுத்தகளமாக உலக நாடுகளால் தற்பொழுது குறிக்கப்பட்டுள்ளது. அர்மகெதோன் யுத்தமானது அந்தி கிறிஸ்துவின் ஆட்சியின் முடிவில் அல்லது உபத்திரகாலத்தின் முடிவில் நடைபெறும். உபத்திரவ காலமாகிய ஏழு வருட முடிவிலே இயேசு கிறிஸ்து, பரிசுத்தவான்களோடு, பரசியமாய் இப்பூமிக்கு வருகையில் பிசாசு பூலோகமெங்குமுள்ள சகல ராஜாக்களையும், சகல ஜாதிகளையும் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு. அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே கூட்டிச் சேர்ப்பான் (வெளி.16:14) அக்காலத்தில் நடக்கும் இந்த யுத்தமானது மிகவும் மகா பயங்கரமாயிருக்கும்.
அந்திக்கிறிஸ்துவும், பூமியின் இராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம் பண்ணு வார்கள். ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும், ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார் (வெளி.17:14) அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும், அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம் போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். மற்றவர்கள் குதிரையின் மேல் ஏறினவருடைய வாயிருந்து புறப்படுகிற, பட்டயத்தால் கொல்லப்படுவார்கள் (வெளி.19:20,21)
4.இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகை
என் தேவனாகிய கர்த்தர் வருவார், தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள் சக.14:5இயேசு கிறிஸ்துவின் பகிரங்க வருகையிலே இயேசு கிறிஸ்து, தம்முடைய தூதர்களோடும், எல்லா பரிசுத்தவான்களோடும் வருவார். இரகசிய வருகையில் இயேசுகிறிஸ்து தம்முடைய தூதர்களோடு மட்டும் வருவார். இயேசு கிறிஸ்து பகிரங்கமாய் வரும்போது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும், அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும், மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டுபுலம்புவார்கள் (மத்.24:30)
ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங் கூடக் கர்த்தர் வருகிறார் யூதா.15.
இயேசு கிறிஸ்துவின் பகிரங்கமான இந்த இரண்டாம் வருகை அந்திக் கிறிஸ்துவின் ஏழாண்டு கால ஆட்சிக்கு பின்பு இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வருவார். இயேசு கிறிஸ்து பாடுபட்ட பின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்கு தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களோடே பேசி, அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்தார். இந்த சமயத்தில் சீஷர்களுடைய கண்களுக்கு மறைவாக ஒருமேகம் அவரை எடுத்துக் கொண்டது. அவர் போகிறபோது அவர் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கையில், இதோ வெண்மையான வஸ்திரந்தரித்தவர் இரண்டுபேர் அவர்களருகே நின்று; கலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப் போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். இயேசு கிறிஸ்து இரண்டாவது பகிரங்கமாக வரும்போது மேகங்கள் மேல் வருவார். இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தின வர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தா ரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள் (வெளி.1:7)
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும். அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே ஒரு பாதி வட பக்கத்திலும், ஒரு பாதி தென்பக்கத் திலும் சாயும் (சக.14:4) என் தேவனாகிய கர்த்தர் வருவார், தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள் (சக.14:5)
இந்த தீர்க்கதரிசன வசனம் நம்முடைய நாட்களிலே நிறைவேறுகிறதைப் பாருங்கள். இந்த மலையின் மேல் ஒருபெரிய ஹோட்டல் ஒன்றை சுற்றுலா பயணிகளுக்கென கட்டும்படி தீர்மானித்து, அந்த மலையின் மையத்தை தெரிந்து எடுத்தார்களாம். பொறியாளர்கள், ஒலிவமலையின் மையத்தை ஆராய்ந்து பார்த்தபோது அம்மலையின் மத்தியில் ஒரு பெரிய வெடிப்பு மேலிருந்து கீழ்வரையிலும் செல்வதை கண்டுபிடித்து, அந்த வெடிப்பைச் சோதித்துப் பார்த்தபோது, அதிசீக்கிரத்தில் ஒலிவமலை தன் மையத்தில் பிளந்துபோய் ஒரு பகுதி வட பக்கத்திலும், மறுபகுதி தென் பக்கத்திலும் சாய்ந்து விடுமென்றும், மையத்தில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு உண்டாகுமென்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாம். எனவே ஹோட்டல் கட்டுவதை நிறுத்திவிட்டார்களாம். நம்முடைய இயேசு கிறிஸ்து பகிரங்கமாக வரும்போது, ஒலிவமலையில் அவருடைய பாதங்கள் நிற்கும் என்ற தீர்க்கதரிசன வசனம் நிறைவேறப் போகிறது. எசேக்கியேல் சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனம் சீக்கிரத்தில் நிறைவேறப்போகிறது. எசேக்கியேலின் தீர்க்கதரிசன வசனமாவது, பின்பு, அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப் பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி, இந்த வாசல் திறக்கப் படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்ப தில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்க வேண்டும். இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம் பண்ணும்படி இதில் உட்காருவார். அவர் வாசல் மண்டபத்தின் வழியாய் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய் புறப்படுவார் (எசே.44:1,2,3)
எருசலேமின் கிழக்கு சுவரின் ஒரு பாகத்தில் ஒரு வாசல் இருந்தது. அதை அலங்கார வாசல் என்றும் தங்க வாசல் என்றும் கூறுகின்றனர். இந்த வாசல் வழியாகத்தான் இயேசு கிறிஸ்து எருசலேம் நகரத்திற்குள் சென்றார் என்று சொல்லப்படுகிறது. இயேசு கிறிஸ்து சென்ற விசேசித்த வாசல் வழியாக மற்றவர்கள் யாரும் செல்லாதிருக்கும்படி, துருக்கியர்கள் அந்த வாசல் இருந்த இடத்தில் ஒரு பெரிய சுவரை கட்டி எழுப்பினார்களாம்.இயேசு கிறிஸ்து பகிரங்கமாக இந்த உலகத்திற்கு வரும்போது இந்த தங்கவாசல் வழியாகத்தான், தம்முடைய பரிசுத்தவான் களோடு எருசலேமுக்குள் பிரவேசிப்பாரென்று நம்பப்படுகிறது. இப்படியாக இயேசு கிறிஸ்து தம்முடைய பரிசுத்தவான்களோடு கூட இந்த வாசல் வழியாய் பிரவேசிக்கும் போது அடைக்கப் பட்டுள்ள இந்த வாசல் திறக்கப்படும் என்பது நிச்சயமாகும்.
அருமையான தேவனுடைய பிள்ளைகளே நாம் ஒரு கொடிய காலத்திற்குள் இருக்கிறோம், உலகத்தில் நடக்கும் சம்பவங்களை, நாம் வேத வசனத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது இயேசு கிறிஸ்து சீக்கிரமாக இந்த உலகத்தில் இரண்டாவதாக வரப்போகிறார். அவருடைய வருகையின் இரகசியங்களை தமது பரிசுத்தவான்கள் மூலமாய் ஆவியினாலே வெளிப்படுத்தியிருக்கிறார். இவைகளை அறிந்த நாம் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக காணப்படுவோம். நம்முடைய நண்பர்கள், பிள்ளைகள் யாவரையும் வருகைக்கு ஆயத்தப்படுத்துவோம்.
0 comments:
Post a Comment