Wednesday, August 29, 2012

வில்லியம் கோல்கேட் கண்ட ஆசீர்வாதம்

இனிமேலும் என்னால் உன்னை கவனித்துக் கொள்ள முடியாது. நீ தான் சொந்தமாக காலில் நின்றுகொள்ள வேண்டும் என அந்த ஏழை தந்தை கேட்டுக்கொள்ள இந்த பதினாறு வயது சிறுவன் தனக்குள்ள எல்லாவற்றையும் ஒரு மூட்டையாக கட்டிக்கொண்டு பட்டணம் நோக்கி பிரயாணம் புறப்பட்டான்.அவன் வந்து சேர்ந்த இடம் நியூயார்க் மாநகரம். சோப்பு செய்து விற்று பிழைக்க வேண்டும் என்பது தான் அவன் எண்ணம்.

நாட்டுபுற பையனுக்கு நகரத்தில் வேலை கிடைப்பதென்பது மிகவும் கடினமாக காரியமாக இருந்தது. அவனது தாயாரின் இறுதி வார்த்தைகளும் தான் பயணித்து வந்த படகின் கேப்டனும் அவனுக்கு கொடுத்த தெய்வீக ஆலோசனைகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன. தனது வாழ்க்கையை தேவனிடத்தில் ஒப்புவித்து தனது வருமானத்தின் ஒவ்வொரு டாலரிலும் பத்தில் ஒரு பங்கை தசமபாகமாக தேவனுக்கு கொடுக்க முடிவெடுத்தான். முதல் டாலர் வருமானம் வந்ததும் அதில் பத்தில் ஒரு பங்கான பத்து செண்டை தேவனுக்கு கொடுத்தான். தொடர்ந்து அவன் அதை செய்ய ஆரம்பித்தான். டாலர்கள் கொட்ட ஆரம்பித்தன. சீக்கிரத்தில் இவன் ஒரு சோப்பு செய்யும் நிறுவனத்தின் பங்குதாரர் ஆனான். சில வருடங்கள் கழித்து இவன் உடன் பங்குதாரர் மரித்து போகவே மொத்த நிறுவனத்தின் பொறுப்பும் இவன் கையில் வந்தது. இவன் இப்போது ஒரு மிகப்பெரிய தொழில் அதிபர். ஆனாலும் பத்தில் ஒரு பங்கை தேவனுக்கு கராராக செலுத்த தன் கணக்குப்பிள்ளைக்கு உத்தரவிட்டிருந்தார். அதிசயகரமாக இவரது தொழில் வளர்ந்தது.நேர்மையான இந்த மனிதர் பின் தேவனுக்கு பத்தில் இரண்டு பங்கை வழங்க தொடங்கினார்.பின் பத்தில் மூன்று பங்கு, பின் பத்தில் நான்கு பங்கு, பின் பத்தில் ஐந்து பங்கு என இறைவனுக்கு தாராளமாக வழங்கினார். விரைவில் உலகமெங்கும் வீடுகள் தோறும்  உச்சரிக்கப்படும் பொருளாகி விட்டது இவர் தயாரிப்புகள்.

அவர் தான் மறைந்து போன வில்லியம் கோல்கேட்(1783–1857).William Colgate கோல்கேட் பிராண்டு தயாரிப்புகளின் நிறுவனர், சொந்தக்காரர். தேவன் மீது கொண்ட அவரது விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்கும் ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டது.கோல்கேட் நிறுவனத்தின் இன்றைய நிர்வாகம் பற்றி நமக்கு அதிகமாய் தெரியாவிட்டாலும் அந்நிறுவனம் இந்த அளவுக்கு வளர்ந்ததற்கான இரகசியத்தை நாம் இங்கே கூறியிருக்கிறோம். இக்கதை இங்கே கோல்கேட் பொருட்களை விளம்பரப்படுத்த எழுதப்படாமல் கடவுள் மீது விசுவாசம் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதை நேர்மையாக கொடுத்து வந்தால் அதை தொடர்ந்து வரும் ஆசீர்வாதத்தை விளம்பரப்படுத்துகிறதாய் இருக்கிறது.

ஆதாரம்
God`s Tenth and Man`s Mite - By Ashley G. Emmer,Signs of the Times, August 2, 1938.

மல்கியா 3:10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

1 comment:

  1. மிகவும் அருமையான உண்மை சம்பவம் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete