Friday, January 27, 2023

சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும்..

 சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும் உள்ளன என இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். உண்மையில் பூமியின் மிக உயரமான மலையை சமுத்திரத்தின் சில பகுதிகளில் எடுத்து எறிந்தால் அது மூழ்கிப்போகுமாம். அவ்வளவு ஆழமான பகுதிகள் கடலினுள் உள்ளன‌. இது இப்படியிருக்க சமுத்திரத்தினுள் பர்வதங்களின் அடிவாரங்கள் இருக்கின்றன என எடுத்துரைத்த ஒரு வேதாகம தீர்க்கதரிசி யாரென உங்களால் ஊகிக்க முடிகின்றதா?  பதில் கீழே.

யோனா தீர்க்கதரிசி.
யோனா 2:6 பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.

மெகித்தோ பள்ளத்தாக்கு.

 படத்தில் நீங்கள் காணும் இஸ்ரேலிலுள்ள மெகித்தோ பள்ளத்தாக்கு போர்களுக்கு பெயர் போன‌ இடம். யோசுவாவின் காலத்திலிருந்தே இவ்விடத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் இவ்விடம் இன்னொரு பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது என்ன என உங்களுக்கும் தெரிந்திருக்குமே?  பதில் கீழே.

வெளி 16:16 அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.

சிங்கத்துக்கு பேர் போன சாம்ராஜ்யம்.

 பண்டைய சாம்ராஜ்யங்களில் இந்த குறிப்பிட்ட சாம்ராஜ்யத்தில் வீரத்துக்கு பேர்போன சிங்கம் மிகவும் பிரபலம். படத்தில் காண்பது போன்ற தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் மட்டுமல்லாது, வேதாகமத்தில் கூட சிங்கங்களின் கெபி குறித்ததான ஒரு அற்புதநிகழ்வு இந்த பேரரசை பற்றி குறிப்பிடும் போது வருகிறது. அது எந்த சாம்ராஜ்யம் என உங்களால் கணிக்க முடிகிறதா?  பதில் கீழே.

பாபிலோன்.

தானியேல் சிங்கக் கெபியில் போடப்பட்ட சம்பவம் நடைபெற்றது, மேதிய ராஜாவான தரியுவின் காலத்தில்.
எப்படி சாலெமோன் ராஜாவிற்கு பின்னர் இஸ்ரவேல் தேசம் வட ராஜ்ஜியம் (இஸ்ரவேல்) தென் ராஜ்ஜியம் (யூதேயா) எனப் பிரிக்கப்பட்டதோ அதனைப் போல பாபிலோனிய பேரரசும், பெல்ஷாத்சார் ராஜாவின் பின்னர், மேதிய மற்றும் பெர்சிய ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டது.
இதனை தெளிவாக வரலாற்றிலும், தானியேலின் தீர்க்கதரிசன புத்தகத்திலும் வாசித்து அறிந்துக் கொள்ளலாம்.

"ஆவியின் கனி" vs "மாம்சத்தின் கிரியைகள்".

 "ஆவியின் கனி" ஒன்பது என்பது உங்களுக்கு தெரியும். பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கும் போது இந்த ஒன்பது ஆவியின் கனி கொடுப்பீர்கள். ஆவியின் கனிக்கு எதிர்பதம் "மாம்சத்தின் கிரியைகள்" என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகள் எத்தனை? அவைகளை வரிசைபடுத்த முடியுமா?. பதில் கீழே.

கலாத்தியர் 5:19 - 21
மாம்சத்தின் கிரியைகள், விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே.


"தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு.

 படத்தில் நீங்கள் காண்பது யோப்பா பட்டணத்திலுள்ள "தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு. இந்த வீட்டில் வந்து தங்கிய இயேசுவின் சீசர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த சீசர் இவ்விடத்தில் ஒரு தரிசனம் காண அதுமுதல் இயேசு யூதருக்கானவர் மட்டுமல்ல, உலகமுழுமைக்கும் அனைத்து ஜனத்துக்கும் கர்த்தரானவர் என அறிந்து கொணடார் அந்த சீசர். வேதாகாமத்தில் இந்த சம்பவம் எங்கு வருகிறது சொல்லமுடியுமா? பதில் கீழே.




சீமோன் பேதுரு.
அப்போஸ்தலர் 10ஆம் அதிகாரத்தில் வருகிறது