Friday, January 04, 2019

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்

January 1, 2019

பாலை, உப்பு நீர், சீரற்ற பருவம் என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது, இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டும் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்
விவசாயத்தில் புதுப்புது யுக்திகளைப் புகுத்தி சாதித்து வரும் நாடு இஸ்ரேல். அந்த நாட்டின் நிலப்பகுதி விவசாயம் செய்ய ஏற்ற நிலம் கிடையாது. பாலை நிலம் கொண்டது. ஆனால், தான் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் செய்து உலக நாடுகளை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது, இஸ்ரேல். உலகிலேயே இந்த நாட்டில்தான் அதிக அளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலில் மழையின் அளவு மிகக் குறைவு. வெயில் அதிக அளவு சுட்டெரிக்கும். நாட்டின் வடக்குப் பகுதியில் மழை சிறிதளவில் பெய்தாலும், தெற்குப் பகுதி எப்போதும் காய்ந்த பூமிதான். ஜோர்டான் நதியின் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் சேமித்தனர். இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே இருக்கிறது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப் மூலம் எடுத்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் விவசாயம் பார்க்கிறார்கள். நாட்டில் கொஞ்சம் பெய்யும் மழையைக்கூட வீணாக்காமல் சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கிறார்கள். கழிவு நீரை முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். 
இஸ்ரேல்
இஸ்ரேல் விவசாயத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 75 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் என்கிறது புள்ளிவிவரம். நீரைக் குறைந்த அளவில் உபயோகித்துப் பல யுக்திகளைக் கையாண்டு விவசாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, இஸ்ரேல். தாவரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதிக அளவில் தண்ணீரைப் பாய்ச்சி நீரை வீணாக்குவது இல்லை. அதேபோல பயிர்களின்மீது மல்ஷிங் சீட் எனப்படும் பிளாஸ்டிக் உறையைப் போர்த்தி, தேவையான அளவு மட்டுமே சூரிய வெப்பத்தைப் படும்படி செய்கிறார்கள். அதிகமான வெயில் பட்டால் தாவரத்தின் நீர்ச் சத்து ஆவியாகிவிடும் என்பதால்தான் இந்தப் பாதுகாப்பு முறை. 
கடல் நீரைக் குடிநீராக்கி குடிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நிலத்தில் ஒரே பயிரை மீண்டும் பயிரிடுவதில்லை. பயிர்சுழற்சி முறையில் பல தாவரங்களைப் பயிரிடுகிறார்கள். 1948-ம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. நம் நாட்டில் விவசாயம் செய்வதுபோலவே அங்கும் நிலத்தைத் தனியாக பிரித்து விவசாயம் செய்து வருகிறார்கள். அதேபோல அரசுக்குச் சொந்தமான இடத்தில் குழுக்களாக விவசாயம் செய்து பங்கு போட்டுக் கொள்ளும் வழக்கமும் இஸ்ரேலில் உள்ளது. கோதுமை, சோளம், காய்கறிகள், பழங்கள் என அதிக அளவில் விளைவித்து சாதித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெள்ளரி, சுரைக்காய், வாழை, பேரிச்சை, ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் இஸ்ரேலுக்குத்தான். அதேபோல ஒயின் உற்பத்தி, பருத்தி உற்பத்தி எனப் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது. லில்லி மலர்களைப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு உலக சாதனை படைத்திருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல்
அதிக அளவில் மாடுகளை வைத்து பால் உற்பத்தியிலும் முன்னணி இஸ்ரேல்தான். மரங்களால் கிடைக்கும் அத்தனை பயன்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல். புதிய தொழில்நுட்ப நீர்ப் பாசனம், வறண்டப் பாலைவனத்தில் பயிர் செய்யும் முறை, நல்ல விளைச்சலைத் தரும் புதுப்புது தாவரங்கள் என அவ்வப்போது ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறது, இஸ்ரேல். மற்ற நாடுகள் இஸ்ரேலின் தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அதிகமான அளவில் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது, இஸ்ரேல். வறண்ட நிலப்பகுதி கொண்ட இஸ்ரேல்... விவசாய தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மையான நாடாகத் திகழ்கிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பழ ஏற்றுமதி செய்யும் நாடும் இஸ்ரேல்தான். இதற்குக் காரணம், விவசாயிகளின் கூட்டுப் பண்ணைத் திட்டமும், இயற்கை விவசாயம்தான்.  
வெப்பம் நிறைந்த பாலை, குடிக்க உதவாத உப்பு நீர், சீரற்ற பருவநிலை என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டே வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது. இதனால் இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழில்நுட்பங்களை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது நிச்சயம் இந்திய விவசாயத்தில் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் வளமான மண் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை செய்ய ஆட்கள் இல்லை, சீரான பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக விவசாய பொருட்களை விளைவிக்கிறது. இந்த வளர்ச்சிதான், இன்று நவீன விவசாய முறைக்கு உதாரணமாக உலகமே சுட்டிக்காட்டுகிறது.
விவசாயம்
நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் உயர் மகசூல் எடுத்து வருகிறது இஸ்ரேல். அங்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இந்திய அரசு இஸ்ரேல் நாட்டோடு இணைந்து இந்தியாவில் ஏழு பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. அவற்றில் மூன்று பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. மலர் சாகுபடிக்காக ஓசூரிலும், மா சாகுபடிக்காகக் கிருஷ்ணகிரியிலும், காய்கறிச் சாகுபடிக்காகத் திண்டுக்கல்லிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment