Friday, January 04, 2019

`கிறிஸ்துவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன்’ - இமான் அண்ணாச்சி

`கிறிஸ்துவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன்’ - இமான் அண்ணாச்சி

December 25, 2018

பிரார்த்தனைகள்தான் பல நற்காரியங்களை எனக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன்.

`கிறிஸ்துவனாக இருப்பதைவிட கிறிஸ்துக்குள் இருப்பதையே விரும்புகிறேன்’ - இமான் அண்ணாச்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த நான் இந்த அளவு வாழ்க்கையில் முன்னேறி, உலகம் முழுவதும் வாழும்  தமிழர்களுக்கு ஓரளவு அறியப்பட்ட மனிதனாக இருப்பதற்குக் காரணம் இயேசுகிறிஸ்து மீதான எனது விசுவாசமும் பக்தியும்தான். 
`நம்முடைய தேவைகளை தேவன் நம்மைவிட அதிகம் அறிந்திருக்கிறார்' என்று பைபிள் கூறுகிறது. என் நண்பர்களில் பலர் குறைபட்டுக்கொள்வதுண்டு. `கடவுள் என் பிரார்த்தனையைக் கேட்கவில்லையே' என்று சில நண்பர்கள் என்னிடம் வருத்தப்படுவர். அதன் பொருட்டு கடவுளை நிந்திப்பவர்களும் உண்டு. 
கிறிஸ்து
அதில் ரகசியம் என்னவென்றால், கடவுள் நம் பிரார்த்தனைகளை உடனே கேட்பார் என்று சொல்லிவிட முடியாது. என் பிரார்த்தனைகளை நிறைவேற்றும்படி நான் நாற்பது ஆண்டுகளாக வேண்டி இருக்கிறேன். ஆனால், அவர் அதற்குக் குறித்த நாளும் நேரமும் வரும்போதுதான் அப்பிரார்த்தனைகளை நிறைவேற்றினார். இன்று எனது பெரும்பாலான பிரார்த்தனைகளைக் கர்த்தர் நிறைவேற்றியிருக்கிறார். நான் வெளி உலகத்துக்குத் தெரிய ஆரம்பித்து கிட்டதட்ட ஆறு ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. இந்த ஆறு ஆண்டுகளில் எனக்கு ஒரு டூ-வீலர், ஒரு கார் இருக்க ஒரு இடமென்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் இயேசு கிறிஸ்து எனக்குத் தந்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன் இறை பக்தியில் தொடர் பிரார்த்தனைகளும் மன உறுதியும் முக்கியமான ஒன்று.  
இமான் அண்ணாச்சி

கிறிஸ்துவுக்குள் வாழ்தல்...
ஒட்டுமொத்த பைபிள் வசனங்களின் சாரம் `உன்னைப் போல் பிறரையும் நேசி' என்பதுதான். இயன்றவரை அந்த வசனத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் வாழ்க்கையின் குறிக்கோள்.  
வறுமையின் காரணமாக பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். எனவே என்னைப் போல இருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மனதுள் தோன்றிக்கொண்டேயிருந்தது. அதன் காரணமாகத்தான் `இணைந்த கைகள்' என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன்.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களுக்கும், தொழில் தொடங்க சிரமப்படுகிறவர்களுக்கும் உதவுவதுதான் `இணைந்த கைகளின்' நோக்கம்.  
சினிமா மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாக எனக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை அதற்கெனச் செலவிட்டு வருகின்றேன். இந்த எண்ணம் எனக்குள் வந்ததற்கு `உனக்கு மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என நினைக்கிறாயோ, அதை நீ மற்றவர்களுக்குச் செய்' என்னும் திருவசனமே காரணம். கிறிஸ்தவனாக இருப்பதைவிட என் செயல்கள் மூலம் கிறிஸ்துக்குள் இருப்பதையே நான் விரும்புகிறேன்.   

தினம்தோறும் பிரார்த்தனை

தினமும், சாப்பிடும்போது, பயணம் புறப்படும்போது, இரவு தூங்கச்செல்லும்போது என மூன்று நேரங்களிலும் நான் பிரார்த்தனை செய்வேன். இந்தப் பிரார்த்தனைகள்தான் பல நற் காரியங்களை எனக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். 
நிகழ்ச்சிகளுக்காக காரில் பயணிக்கும்போது நான்கு முறை விபத்திலிருந்து தப்பியிருக்கிறேன். அப்பொழுதெல்லாம் கர்த்தரே என்னைக் காப்பாற்றினார் என்று நன்றியோடு அவரை நினைவுக் கூர்வேன். அன்றாடம் நாம் வாழும் வாழ்க்கையே இயேசு கிறிஸ்துவின் கருணை தான் என்று உறுதியாக நம்புகிறேன் .
மனித சமூகம் வாழப் பத்துக் கட்டளைகள்
மனித சமூகம் துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கு ஆண்டவர் மோசேயிடம் நமக்கு பத்துக் கட்டளைகளை அளித்தார் . 
இமான் அண்ணாச்சி
 
அந்தப் பத்துக் கட்டளைகள்:
1. நானே உன் கடவுள். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது.
2. உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பதில், கருத்தாக இரு.
4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட.
5. கொலை செய்யாதே.
6. விபச்சாரம் செய்யாதே.
7. களவு செய்யாதே.
8. பிறருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்லாதே.
9. பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே.
10. பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. இவையே அந்தப் பத்துக் கட்டளைகள். 
புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு,  இந்தப் பத்துக் கட்டளைகளையும் இரண்டு கட்டளைகளாகச் சுருக்கமாக்கித் தந்தார். அவை
அதில் முதலாவது எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுளை அன்பு செய். 
இரண்டாவது உன்னிடத்தில் நீ அன்பு செய்வது போலப் பிறரிடத்திலும் நீ அன்பாக இரு என இரண்டே கட்டளைகளாக ஆக்கினார்.
இவற்றை நான் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும் ஓரளவு கடைப்பிடிக்கவே முயல்கிறேன். அதுதான் என் வாழ்வின் நோக்கம்.
கால மாற்றங்களுக்கு ஏற்ப நான் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலிருந்து கற்ற பாடங்கள் மூலம் உருவாக்கிக்கொண்ட சிலவற்றை நெறிகளாகக் கடைப்பிடிக்க முயல்கிறேன்:
1. பிறர் மனம் நோக வாழாதே.
2) உன்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவிசெய்.
3) போலித்தனமாகப் பழகாதே.
4) தேவையில்லாமல் புகழாதே
5) நன்றி மறவாதே.
6) மன்னிக்கக் கற்றுக்கொள்
7) தீமை செய்பவரையும் நேசி.
கர்த்தருக்குப் பிரியமானவனாக வாழ அனைவரையும் நேசிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment