Friday, December 07, 2018

என் வாழ்க்கையும் இடிஞ்சு விழுந்துச்சு- ஜேம்ஸ்வசந்தன் #WhatSpiritualityMeansToMe

என் வாழ்க்கையும் இடிஞ்சு விழுந்துச்சு- ஜேம்ஸ்வசந்தன் #WhatSpiritualityMeansToMe
``ன் ரூம்ல ஜீசஸ் படமோ, பைபிளோ எதுவும் இருக்கக் கூடாதுன்னு எடுத்துப் போட்டுட்டேன். சர்ச் பக்கமே போகக் கூடாது என்று இருந்த நான் மறுபடியும் பிரேயர் லைஃபுக்குள்ள வந்தது கர்த்தரின் ஆசீர்வாதம்தான்'' என்கிறார் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். தீவிர நாத்திகராக இருந்த அவர் மீண்டும் கிறிஸ்துவை தான் ஏற்றுக்கொண்ட விதம் பற்றி நெகிழ்வாகப் பேசினார். 
ஜேம்ஸ் வசந்தன்
``ஞாயிற்றுக்கிழமை வந்தாலே மனசுல சந்தோஷம் வந்திடும். காலையிலே குளிச்சு முடிச்சிட்டு பிரேயருக்குப் போயிடுவேன். என்னுடைய குடும்பம் கிறிஸ்தவக் குடும்பம். அதிலும் பாரம்பர்யமிக்க சி.எஸ்.ஐ ஆங்கிலிக்கன் சர்ச்சைச் சேர்ந்தவர்கள். திருச்சி, புத்தூர் மார்க்கெட் பக்கத்திலிருந்த எங்க வீட்டுக்கு எதிர்லேயே சர்ச். 
நானும் அண்ணனும் சின்னவயசுலேருந்து சர்ச்சில் ஜெபப் பாடல்களுக்கு இசையமைக்கும் குழுவில் இருந்தோம். அதனால 8 மணிக்கு சர்ச்னா 7 மணிக்கெல்லாம் போய் எல்லாத்தையும் ரெடி பண்ணுவோம்.   
காலை, மாலை ரெண்டுவேளையும் சர்ச்தான், இயேசு கிறிஸ்துதான், பைபிளின் திருவசனங்கள்தான்னு வளர்ந்தவன். ஆனா, அப்போதெல்லாம் கடவுளைப் பெருசா உணர்ந்ததில்ல. பெருசா வெறுத்ததும் இல்ல. படிப்பெல்லாம் முடிஞ்சு, சின்னச் சின்னதா மியூசிக் கம்போஸ் பண்ணிப் பாடல்கள் எழுதிப் பாடிக்கிட்டிருந்தேன். ஒரு கீ போர்டு வாங்கணும்ங்கிறது என் கனவு. ஆனா அது நிறைவேறல. யார் யார்கிட்டயோ கேட்டுப் பார்த்தேன். கடைசியா ஆண்டவர்கிட்ட பிரேயர் பண்ணினேன். ஆனா என்னால கீ போர்டு வாங்கமுடியலை.
ஜேம்ஸ் வசந்தன்
ச்சே... நாம ஒரு நல்ல விஷயத்துக்குத்தானே இதைக் கேக்குறோம். இதுக்குக்கூட இந்தக் கடவுள் ஹெல்ப் பண்ணக் கூடாதா? கடவுளே கிடையாதுன்னு ஆத்திரத்தில முடிவு பண்ணினேன்.  
1994 -ல சன் டிவியில் வேலை கிடைச்சு சென்னைக்கு வந்துட்டேன். கல்யாணம் ஆகி பிள்ளைகள் பொறந்தாங்க. அவங்களோட நம்பிக்கைகள்ல நான் தலையிட விரும்பலை. 
`உங்களுக்குப் பிடிச்சுதுன்னா கோயிலுக்குப் போங்க, என்னைக் கூப்பிடாதீங்க. பாஸ்டர், ஸ்தோத்திரப் பாடல்கள், ஜெபம்னு சொல்லிக்கிட்டு  என்கிட்ட வரக் கூடாது'ன்னு சொல்லிட்டேன். என் ரூம்ல ஜீசஸ் படமோ, பைபிளோ எதுவும் இருக்கக் கூடாதுன்னு அதையெல்லாம்  எடுத்துட்டேன். சர்ச் பக்கமே போக மாட்டேன். கிட்டத்தட்ட பத்து வருஷம்... 
ஜேம்ஸ் வசந்தன்
 2001 செப்டம்பர் 11 -ம் தேதி அமெரிக்காவுல தீவிரவாதிகளின் தாக்குதலால் `ட்வின் டவர்' இடிஞ்சு விழுந்துச்சு. அதே நாள்ல என் வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒரு இடி விழுந்துச்சு. என் வாழ்க்கையும் சரிஞ்சு விழுந்துச்சு. அது இப்போ இங்க வேணாம். அதிலிருந்து என் வாழ்க்கையிலும் கொஞ்சம் கொஞ்சமா மாற்றம். பயம் வருது. கேள்விகள் வருது. 
கோடம்பாக்கத்துல என்னுடைய விளம்பர நிறுவனத்தை நடத்திக்கிட்டிருந்தேன். சன் டி.வி., விஜய் டி.வி ரெண்டுலயும் புரோகிராம் பண்ணினதுனால செலிபிரிட்டிங்கிற இமேஜ் கிடைச்சிருந்துச்சு. இதனால அடிக்கடி கிறிஸ்தவ மதபோதகர்கள் என்னைப் பார்க்க வருவாங்க. ஆனாலும் யாரையும் பார்க்கமாட்டேன்.     
கேபிரியல்னு என் ஃபிரெண்டு. கிடாரிஸ்ட். வெஸ்டர்ன் மியூசிக்ல பின்னிப் பெடல் எடுப்பான். 2003 -ம் வருஷத்துல ஒரு நாள்...
முத்து சாம்ராஜ்ங்கிற பாஸ்டரைக் கூட்டிக்கிட்டு என்னுடைய அறைக்கு வந்தான். இதுமாதிரியுள்ளவங்களை எனக்குப் பிடிக்காதுன்னு அவனுக்கு நல்லாவே தெரியும். ஆனாலும் அழைச்சுக்கிட்டு வந்தான்.
அன்னிக்கு என்னவோ தெரியலை. நானும் அவரைப் பார்க்க மறுக்கலை. அவரிடம் பேசிக்கிட்டிருந்துட்டு அனுப்பிச்சிட்டேன். அன்று இரவு என்னால தூங்கவே முடியலை. அவருக்கு அந்த ராத்திரி நேரத்துல போன் பண்ணி என் கஷ்டங்களைச் சொன்னேன். அவரும் `இப்பவே வரட்டுமா?'ன்னு கேட்டார். `இல்ல சார் நாளை மாலை பெசன்ட்நகர் பீச்சுலச் சந்திப்போம்'ன்னு சொன்னேன்.
இயேசு நாதர்
போன்ல சொன்னது மாதிரியே சந்திச்சுப் பேசினோம். எனக்குள் மிகப்பெரிய மனமாற்றம் நிகழ்ந்துச்சு. என்னுடைய மனக்காயங்களுக்கெல்லாம் அவருடைய வார்த்தைகள் பெரிய அளவுல ஆறுதலாக இருந்துச்சு. 
நான் மீண்டும் பிரேயர் லைஃப்க்குத் திரும்பிட்டேன். வழிதவறிப் போயிருந்த எனக்கு நல்ல ஒரு குருவா அவர் கிடைச்சார். அதைத் தொடர்ந்து என் வாழ்க்கையிலும் என்னிடத்திலும் நிறைய மாற்றங்கள். வாழ்க்கையே புதுசா தெரிஞ்சுது. இன்னிக்கு நான் இந்தளவுக்கு  இருக்கிறேன்னா அதுக்கு ஆண்டவரின் அருட்கொடைதான் காரணம்கிறதை நான் முழுசா நம்புறேன்'' என்று பரவசத்துடன் சொல்கிறார் ஜேம்ஸ்வசந்தன். 

எஸ்.கதிரேசன்

இதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment