Thursday, March 27, 2008

சண்டையிட்ட சூரியனும் சந்திரனும்

ஒரு முறை சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டன. மரத்தின் இலைகள் பச்சை நிறமானவை என சூரியன் சொல்ல, இலைகள் வெள்ளி நிறமானவை என சூரியன் சாதித்தது.

பூமியின் மனிதர்கள் தூங்குகிறார்கள் என்று சந்திரன் சொல்ல,எல்லாரும் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதாக சூரியன் சாதித்தது.

பூமி அமைதியாக இருப்பதாக சந்திரன் சொல்ல,"ஒரே இரைச்சலாக இருக்கிறது" என்று சண்டைக்கே வந்து விட்டது சூரியன்.

சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை காற்று கவனித்துக்கொண்டிருந்தது.

காற்று சொல்லியது "உங்கள் சண்டை பயனற்றது.நான் சூரியன் பிரகாசிக்கும் போதும்,சந்திரன் பிரகாசிக்கும் போதும் இருக்கிறவன். பகலில் சூரியன் பிரகாசிக்கும் போது சகலமும் அது சொன்னபடியே இருக்கிறது.இரவில் சந்திரன் பிரகாசிக்கும்போது அனைத்தும் அது சொன்ன படியே இருக்கிறது.

ஆனால்,இரவில் உலகம் எப்படி இருக்கும் என்பது சூரியனுக்குத் தெரியாது.பகலில் உலகம் எப்படி இருக்கும் என்பது சந்திரனுக்குத் தெரியாது.ஆகவே உங்கள் இருவருக்குமே முழுமையான உண்மை தெரியாது" என்றது காற்று.

நாத்திகர்கள் உலகின் சடப்பொருள் தன்னையைக் கண்ணுற்று அவைகள் தான் உண்மை என்று வாதிடுகின்றனர்.

புத்த மதத்தவர் "மனம்" ஒன்று தான் உண்மையானது, மற்ற அனைத்துமே மாயையின் தோற்றங்கள் என்று கூறுகின்றனர்.

ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்கள் மட்டுமே முழுமையான உண்மையை உணரக் கூடியவர்கள்.அவர்கள் உலோகாயுத கொள்கைக்கோ,சிந்தனையாளர்களின் கொள்கைக்கோ கட்டுப்படமாட்டார்கள்.

நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

Wednesday, March 26, 2008

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21