Friday, September 21, 2012

காத்துக்கிடக்கும் கிழக்கு வாசல்

இயேசு கிறிஸ்துவின் வருகைக்காக நீங்கள் காத்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்பநாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு. இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசுகிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம்.அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.

வேதம் சொல்லுகிறது”இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.” எசேக்கியேல்:44:2 அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.

கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப் பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள்.ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.

அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்? மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். ”இது அதிபதிக்கே உரியது,  அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப்  பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.” எசேக்கியேல் 44:3.

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன். வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா.(சங்கீதம் 24:9,10)

3 comments:

  1. கிறிஸ்து யேசு ராஜாதிராஜ வாய் வர போகிறார் அல்லேலுயா

    ReplyDelete