Thursday, March 01, 2012

மாணிக்க திருமொழிகள் - 2

ஈரமான விறகுக் கட்டையை அடுப்பில் வைக்கும் போது அது எரியுமுன்னே இரைச்சலும் புகைச்சலுமுண்டாகும். அப்படியே தேவனுடைய பிள்ளைகள் தங்கள் ஜெபத்தைத் தேவனுக்கு ஏறெடுக்கு முன் அவர்கள் இதயத்திலிருந்து அலறுதலும், புலம்பலும் உண்டாகி, அதன் பிறகே ஜெபம் கொழுந்து விட்டு எரிவது போலிருக்குமாம்.

டிராம் வண்டி பவர் ஹவுசிலிருந்து வல்லமை வரும் மின்சாரக் கம்பியைத் தொட்டுக் கொண்டிருக்கு மட்டும் எந்நேரமும் ஓடும். அவ்வாரே ஜெபத்தினால் தேவனைத் தொட்டுக் கொண்டிருக்கிறவர்கள் யார் யாரோ அவர்களுக்கு வல்லமை வந்து கொண்டே இருக்கும்.

தேனைப்போன்று தித்திப்பாகவும் இருந்து விடாதே, வேப்ப எண்ணெய் போன்று கசப்பாகவும் இருந்து விடாதே! ஏனெனில் முன்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை இனிக்க இனிக்கப் பேசி ஏமாற்றி விடுவார்கள். பின்னதைப் போலிருந்தால் எல்லோரும் உன்னை வெறுத்து விடுவார்கள். ஆகையால் பகுத்தறிவை உபயோகித்து விவேகமாய் நடந்துகொள்.

ஒரு துண்டு இரும்பு விலை ஒரு பவுண்.
அதைக் குதிரை லாடங்களால அடித்தால் 2 பவுண் கிரயமாகும்.
அதே ஒரு பவுண் இரும்பை ஊசிகளாக அடித்தால் 70 பவுண் மதிப்பாகும்.
அந்த ஒரு பவுண் இரும்பையே கடிகார “மெயின் ஸ்பிரிங்” ஆக அடித்தால் 1000 பவுண் பெறுமதியாகும்.
மனுஷனின் வேலைத் திறமை அரிய ஆற்றல் கொண்டது. அப்படிப்பட்ட மனிதனுக்கு வேலை கிடைப்பதில்லை. இது யார் குற்றம்?

அவளுக்குக் குழந்தை குட்டிகள் இல்லையே! ஏன்?
விதை எல்லாம் முளைப்பதில்லையே!
பூவெல்லாம் காய்ப்பதில்லையே!

வித்தையுள்ளவன் தூங்கான்.
விசாரமுள்ளவன் தூங்கான்.
பணக்காரன் தூங்கான்.
பைத்தியக்காரன் தூங்கான்.

வேதப்புத்தகம் பாவம் செய்யாதபடி உங்களைத் தடுக்கும்; அல்லது இப்புத்தகத்தை தொடவிடாதபடி பாவம் உங்களைத் தடுத்துவிடும்.

வாழ்க்கை என்பது
18 வயது வரை கனவு.
40 வயது வரை போர்.
40 க்கு மேல் சுழல்தான்.

சூரியன் பிறருக்கு ஒளி கொடுக்கிறது. காற்று பிறருக்காகவே வீசுகிறது. மரம் கூட பிறருக்காகத்தான் பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குகிறது.நிழல் தருகிறது. ஆனால் இந்த நன்றி கெட்ட மனிதன் மட்டும் தனக்காகத்தான் வாழ விரும்புகிறான்.

உன்னாலான மட்டும் சம்பாதி.
உன்னாலான மட்டும் மீதிபிடி.
உன்னாலான மட்டும் கொடு.

அன்புடனே பழகு - உடனே
அழகனாகிடுவாய்
முன்பின் எண்ணிப் பழகு - உடனே
முன்னுக்கு வந்திடுவாய்
ஆள் தெரிந்து பழகு - உடனே
அறிஞன் ஆகிடுவாய்
கேள்வி கேட்டுப் பழகு - உடனே
கேட்கும் சுகம் பெறுவாய்

ஒரு தரம் பிறந்தவர்களுக்கு இரண்டு சாவு,
இரண்டு தரம் பிறந்தவர்களுக்கு ஒரு சாவு.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment