Thursday, February 04, 2010

சாத்தானின் பஞ்சதந்திரம்

யாத்திராகம புஸ்தகத்தில் நாம் எகிப்திய மன்னன் பார்வோனை சாத்தானுக்கு இணையாகவும், எகிப்தை இந்த உலகத்துக்கு இணையாகவும் காண்கிறோம். எகிப்திலிருந்து விடுதலைப்பெற்று கர்த்தர் வாக்குக்கொடுத்த கானான் தேசத்துக்குப் போக இஸ்ரேல் ஜனங்கள் புறப்படும்போது அதை தடுக்க என்னவெல்லாம் தந்திரங்கள் பார்வோன் உபயோகிக்கிறான் என பாருங்கள். இந்த மாதிரியான தந்திரங்களைத் தான் இன்றைக்கும் சாத்தான் பாவத்திலிருந்து விடுபட முயலும் அனைத்து ஜனங்களிடமும் உபயோகிக்கிறான்.

முதலாவது தந்திரம் : ஒத்திப்போடு
யாத்:8:10-ல்.அதற்கு அவன்: நாளைக்கு என்றான்.
அதாவது இஸ்ரேல் ஜனங்கள் இன்றைக்கு இல்லை. அவர்கள் நாளைக்கு புறப்பட்டு போகலாம் என்கிறான். எதையுமே நாளைக்கு என தள்ளிப்போட வைத்தல் அவனின் முதலாவது தந்திரம். IIகொரிந்தியர் 6:2 சொல்கிறது. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

இரண்டாவது தந்திரம் : ஒத்துப்போ
யாத்:8:25-ல் அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான். அதாவது இஸ்ரேல் ஜனங்கள் எங்கும் போகவேண்டாம். எகிப்திலிருந்தே கர்த்தரை வழிபடலாம் என்கிறான். உலகத்தோடு ஒத்துப்போக செய்யவைப்பது அவனின் இரண்டாவது தந்திரம். ரோமர் 12:2 சொல்கிறது நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்.

மூன்றாவது தந்திரம் : ஒதுங்கிப்போ
யாத்:8:28. அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்;...என்றான். அதாவது இஸ்ரேல் ஜனங்கள் புறப்பட்டு போகலாம் ஆனால் ரொம்பதூரமாய் போக வேண்டாம் என்கிறான். நம்மையும் கூட சாத்தான் நீ கிறிஸ்துவுக்குள் இரு, ஆனால் ரொம்ப கிறிஸ்துவுக்குள் மூழ்கிப்போக வேண்டாமே என சாத்தான் அறிவுரை சொல்லுவான்.

நான்காவது தந்திரம் : ஒருவனாய் போ
யாத்:10:11. புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அதாவது இஸ்ரேலின் புருசர்கள் மட்டும் போய் ஆராதனை செய்யலாம், ஆனால் அவர்கள் தங்கள் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் விட்டு விட்டு செல்ல வேண்டும் என்பது அவன் அடுத்த தந்திரம். யோசுவா 24:15 சொல்கிறது நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்

ஐந்தாவது தந்திரம் : ஒன்றும்கொடாதிரு
யாத்:10:24. அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான். அதாவது எல்லாரும் குடும்பமாக போய் ஆராதனை செய்யலாம். ஆனால் உங்கள் பணமும் சொத்துக்களும் மட்டும் எனக்காக இருக்கட்டும் என்கிறான்.

நாமும் நம்முடைய அனைத்தும் கர்த்தருக்கு சொந்தமானதாக இருப்பதாக.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment